நீதி, நியதி.

பொய்கள் முதலில்
பொங்கிப் பிரவகித்து
மெய்களை விழுங்கி விடுமெனிலும்,
பரபரப்புப்
பொய்கள் ஜெயிப்பது போல இருந்திடினும்,
பொய்களைப் பலரும் போற்றிடினும்,
அவற்றின் ஆயுள்
அற்பந்தான்;
சோடிக்கப் பட்ட அவற்றின்வேடம்
சொற்பத்தில் வாடித் துவளும்காண்!
எதுநிஜமோ
நிற்கும்; பொய்வயிற்றைக் கிழித்து நீளும்!
பொய்களுக்குத்
துணைபோகும் அதிகாரம்
தோற்றுண்மை தனைத் தெளியும்!
பிணைநின்ற கால நேரம்
பிழைதேறும்!
வம்பாக
அள்ளிவிடும் ஆதாரம் அற்ற இழிவுரைகள்…
கள்ளத் தனம்புனைந்த கட்டு கற்பனைக்கதைகள்…
குள்ள நரிக்குணத்தில்
குறிவைக்கும் சுயநலங்கள்…
பரப்பி விடப்பட்ட பழிச்சொல்…
அவதூறு…
உருமாற்றி விடப்பட்ட உருட்டு
புரட்டுக்கள்…
தெரிந்தே சுமத்தி விடப்பட்ட குற்றசாட்டு…
குப்பை சருகுகளாய்க் குலைந்துக்கும்!
அறம் மெய்யை
நப்பாசை யோடு நசித்திடலாம்
என்பவரின்
அழுக்கு மனங்கள்
அவர்க்கே புதைகுழியாகும்!
ஒழுங்காக்கும் காலம்…
உண்மைகளை மறைத்து
விழவைத்த… கறைகழுவும்!
விதி நிஜத்தை வெல்லவைக்கும்!
இதுதான் இயற்கை நீதி நியதி
இது என்றும்
சிதையாச் சமநிலையால் தான்,
வாழும் மனித சாதி!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.