கனவுகளின் புகழ்

கனவுகள் என்மேல் கவியத் தொடங்கின; ஆம்
மனமும் உடலும் மயங்கி
உறக்கத்தின்
பிடிக்குள் கிறங்க
எங்கெங்கிருந்து வந்தோ
படிந்தன கனாக்கள்!
படுக்கையில் யான் எனைத்தொலைத்து
இல்லையென் றாகி இயல்பிழந்து
உடல் உணர்வு
இல்லாமல் இருக்க…
கனவுகளே துணையாக…
மனம்மட்டும் அவற்றோடு கைகோர்த்துக் கதைபேசி
கணமும் புதிதாகிக்
களிக்கத் தொடங்கிற்று!
ஒவ்வொரு கனவும் ஒவ்வோர் புதுமொழியில்…
ஒவ்வொரு கனவும் ஒவ்வோர் புது நிறத்தில்…
ஒவ்வொரு கனவும் ஒவ்வோர் புதுமணத்தில்…
ஒவ்வொரு கனவும் ஒவ்வோர் புதுச்சுவையில்….
ஒவ்வொரு கனவும் ஒவ்வோர் புதுஇடத்தில்…
மனதைக் கவர்ந்தன!
வந்து வந்து போனவற்றில்
நினைவில் ‘பல’ தொலைந்து;
நேரே தொடர்பிலாது;
என்னைக் குழப்பின!
இறுக்கி சில அமுக்கி
என்னை மருட்டின!
இவ்வாறு சூழ்ந்த
கனவுகளின் மொழியை,
கனவுகளின் நிறத்தை,
கனவுகளின் மணத்தை,
கனவுகளின் சுவையை,
கனவுகளில் கண்ட காட்சிகளை,
அழகுகளை,
மனதில் பயமூட்டி வியர்க்கவைத்த
அவற்றையிப்போ
தேடுகிறேன்…
எவையும் கண்முன் தெரியுதில்லை!
ஆயினும் அவைதந்த அருளை,
மகிழ்ச்சியினை
என் ‘நனவு’ எனக்கு
என்றுமே தந்ததில்லை!
என்கனவின் எல்லைகளை
என்யதார்த்தம் என்றுமே
கண்டடையப் போவதில்லை!
கனவுபோடும்…துயரவாழ்வுப்
புண்களுக்கு ஒத்தடங்கள்
வேறெவரும் போட்டதில்லை!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.