கண்களில் பிறந்தன கவிதைகள் கோடி.
கற்பனை சுரந்தது கனவினில் தேடி.
வண்ணமே வகைவகையாய் எழுந்தெங்கும்
மலர்ந்தன; மலர்களாய்…எழில் மிகத் தங்கும்.
பண்களும் பிறந்தன பரவின திக்கில்
பசி பிணி தொலைந்தது…இடர் விழும் செக்கில்.
புண்களும் மறைந்திடும்; பொலிவெழும் நாளை,
புதல்வர்களே இன்றே புறப்படு வீரே!
அரசியல் பிழைத்திடில் அறமது கூற்றாய்
அழிந்ததைக் கண்டனம்; காலமும் விதியும்
இருந்து தான் நீதியை நிலைபெறச் செய்யும்
எதார்த்தத்தை இக்கலி நாளிலும் பார்த்தோம்!
பெருகிய குருதிக்கும் போன உயிர் கட்கும்
பிறக்குமோர் நியாயம் என நம்பு கின்றோம்.
வருமொரு காலம் வசந்தம் கை சேரும்
வலியவரே…ஓயா துழைத்திடு வீரே!
விண்ணில் இருந்தச ரீரிகள் கேட்கும்.
வேறொரு காலம்,கோள்,நேரமும் மாறும்.
மண்ணுள பாலைகள் மறைந்திடும்; பசுமை
மளமள வென வரும்…வரலாறு வாழும்.
உண்மையின் விதையெலாம் முளைக்கும்; அழிவில்
உதிர்ந்தவை மீண்டெழும்.
உரம் பெறும் தேசம்!
எண்ணிய ஈடேறும் இயற்கை…மெய் மீட்கும்.
இளையவரே பள்ளி எழுந்திடு வீரே!