இருபத் தைந்து எழில்கொள் நாட்கள்
எமக்கு நல்கும் பெருவரங்கள்.
எட்டுத் திக்கும் இருந்து வந்துன்
இடத்தில் செய்வோம் நிதம் தவங்கள்.
பெரியோர் சிறியோர் எனும் பேதங்கள்
பெருவேலின் முன் விழும்;மனங்கள்…
பிணிகள் தீர்க்கத் தொழுதாற் போதும்;
பிரகாசிக்கும் பயணங்கள்.
தேரில் இருந்து திசையை அளந்து
சேய்கள் கதையைக் கேட்டிடுவாய்.
தீயில் புகுந்து தேகம் அவிந்த
தேவர்… எமையும் மீட்டருள்வாய்.
வேரில் விழுந்த வினை வெந்நீரை
விரலாற் துடைப்பாய் தேற்றிடுவாய்.
வில்லத் தனங்கள் செய்யும் விதியை
வேலின் நுனியால் மாற்றிடுவாய்.
தீர்த்தம் ஆடிப் பூங்கா வனத்தில்
தேவிகளின் கை சேர்த்து நின்று,
தேவை பலவும் தீர்த்து நேர்த்தி
தீர்த்தோர் களுக்கு வரமுவந்து,
ஊரைக் காத்து உணர்வைக் கோர்த்து
உயிரின் நோய்க்கு அருமருந்து
ஊட்டிச் செல்வாய்; ஆன்ம ஞானம்
உரைப்பாய்… நித்தம் அருகிருந்து!