திருவிளையாடல்

நரிகள் பரிகளான அன்றை வரலாறு
திரும்பியதா இன்று?
வில்வ மரங்களெல்லாம்
இரவொன்றுள் அரச மரங்களென மாறியன.
வில்ல மரநிழலில்
வீற்றிருந்த பெருமகன்மார்
இல்லை இடமென்று இடம்பெயர
அரசடியில்
மோனத் தவப்பஞ்ச சீலர் முகாமிட்டார்.
கோபுரமும் பள்ளிகளும் சிலுவைத் திருச்சபையும்
அரச மரமென்ற
அரும்பெரும் மரத்தின்கீழ்
ஒளியும் நீரும் கிடைக்காப்… புல் பூண்டுகளாய்
வாடி வதங்கினகாண்!
இரட்சண்ய சேனைகளை..
தேவர்களின் சேனைகளைத் துரத்திற்று பலசேனை.
இராவண சக்திகளின் எழுச்சியின்முன்
மனுமகனாம்
இராமனின் சக்தி எதும்செய்யா தடங்கிடுது!
நரிகள் பரிகள் ஆவதுவாய்…
தினந்தினமும்
திருவிளையாடல் நூறெம்
தெருவில் அரங்கேறிடுது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply