வேலோடு வினைதீர்க்க வீற்றிருப்பான் -எங்கள்
விரதங்கள் தமைக்கண்டு போற்றி நிற்பான்.
காலங்கள் தமைமாற்றிக் கட்டிவைப்பான் -காணும்
கனவெல்லாம் கண்முன்னே கிட்டவைப்பான்.
நல்லூர்ப் பொற் பதி வாழும் சக்திரூபன் -நம்பி
நாடுவோர் தமைக்காக்கும் ஞானவேலன்.
எல்லோர்க்கும் எழில் காட்டி மீட்கும் தீரன் -முன்பு…
எவ்வாறு வெல்வானோ மாய சூரன்?
வேராகி ஆதாரம் தருகின்றவன்- பக்தர்
மேன்மைக்கு வரம் நித்தம் அருள்கின்றவன்.
தீராத பிணி யாவும் சுடுகின்றவன்- எங்கள்
திசைதிக்கில் ஒளியாகிச் சுடர்கின்றவன்.
திருவிழா நாள்தோறும் வீதிசுற்றி -வள்ளி
தெய்வானை கைகளை நிதமும் பற்றி
வருபவன்..அடி தொழு பக்தி முற்றி -கேட்கும்
வரம் வரும்; தொடருமாம் வாழ்வில் வெற்றி!