வீதி சுற்றி வருகிறாய் -எழில்
மின்ன மின்னச் சிரிக்கிறாய் -அருள்ப்
போதையூட்டி மயக்கிறாய் -உயிர்
பூக்க வைத்து இயக்குவாய் -வெறும்
பேதையர்களை மேதையாய் -நிதம்
பேச வைத்து வளர்க்கிறாய் -தமிழ்
நாதியற்றது இல்லைகாண் -என
நல்லை வீதியில் சொல்கிறாய்!
நாளுமே வகை வாகனம் -தனில்
நல்லரசனாய்ச் சுற்றியே -வரும்
வேலன் உன் முகம் காணவே -நிதம்
வீதி யோரம் குவிகிறோம் -மணி,
நாத வாத்தியம், பாசுரம், -உடன்
நறும்புகை, ஒளி தீபங்கள் -இடை
வேத நாயகன் நீவரும் -விழா
வீதி…சொர்க்கமாய் மாறுதே!
கோடி கோவில் இருக்கவும் -உந்தன்
கோவில் ஏதோ தனித்துவம் -கொண்டு
தேடித் துன்பம் துடைக்குது -ஆன்ம
தேவை தீர்த்தும் அருளுது. -எழில்
சூடி வந்த பொழுதிலும் -மோனச்
சொற்கள் பிழையைத் திருத்துது. -எவர்
நாடி நின்று வணங்கவும்- நல்லை
ஞான பாதையைக் காட்டுது!
எங்கு இருந்து திரண்டனர் ?-என
எண்ணும் படிக்கு அடியவர் -உன்னில்
சங்கமித்து மகிழ்கிறார் -மனச்
சாந்தி பெற்றும் உயிர்க்கிறார் -அருள்
பொங்கும் உள் வெளி வீதியில் -நரர்
புனிதராகவே மாறுவார் – வாழ்வில்
மங்கலங்கள் பெறுகிறார் -மன
வாட்டம் ஓட்டித் திரும்புவார்!