யதார்த்தம்

சீராய் ஒன்று சிறப்பாய் நடந்தால்
திசைகள் ஏற்காது -கண்டு
சேர்ந்துமே போற்றாது -அதை
நேர் நோக்கோடு நோக்கு தற்கும்
நெஞ்சம் விரும்பாது -குறைகள்
நீட்டும் பலவாறு.

கச்சித மாகக் கனவை நனவாய்
கண்முன் தருபவனை -அவனின்
கடமை அர்ப்பணிப்பை -மிகத்
துச்சமாய் எண்ணும் சகியா மனங்கள்
சொல்லும் அவதூறை -தினம்
சூட்டும் பழிமாலை.

நேர்த்தி யாகக் கீர்த்தி யாக
நேர்மை, மெய் சூழ -ஒருவன்
நின்றிருப்பான் வாழ -அயல்
பார்த்துப் போற்றிப் பணியாது; ‘அறமே
பாடும்’ அவன் வீழ -முந்தும்
பழியைத் தினம் போட.

குறையைக் குறையாய் நிறையை நிறையாய்
கூறும் ஓர் மகனை -அவன்
குவிக்கும் சாதனையை -மனம்
பொருமித் தோன்றும் பொறாமை யாலே
புறுபுறுத்துத் தள்ளும் -சமூகம்
புழுத்துத் துயர் கொள்ளும்.

மற்றவன் ஒருவன் செய்தற் கரிய
வரலாறு படைத்தால் – அதனை
வழிமொழியார் மனதால் -குறை
குற்றங்கள் தேடிக் குடைவார்; நிறைகள்
குவிந்திடும் ஆயிரமும் -அதனைக்
குறிக்காதூர் இதயம்.

ஓரா யிரமாய் நன்மைகள் செய்தும்
ஒருவரும் பார்க்கார்கள் -அதை
உடன் வந்து வாழ்த்தார்கள் -அதில்
ஏதேனும் ‘முட்டையில் மயிர் பிடுங்கல்’ போல்
எடுத்துக் கதைப்பார்கள் -விசச்சொல்
எறிந்து இழிப்பார்கள்.

ஆயிரம் ஆயிரம் ஆசி பாராட்டு
அற்பத் தனங்களுக்கே -இல்லை
அற்புதம் செய்தவர்க்கே -மன
நோயிது தீர்ந்திட வாய்ப்பிலை; நின்பணி
நொடியாமற் செய் தொடர்ந்தே -தடை
நொருங்கும் நட… கடந்தே!

கள்ளத் தனமாய் எள்ளும் எளியர்
கவலைப் படமாட்டார் -தங்கள்
கரமும் தரமாட்டார் -பல
உள்ளம் உணரும்…உண்மை அறியும்
உழைத்துக் களைத்தவரை -அவரின்
ஊக்கம் ஜெயித்ததனை!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.