நெஞ்சில் நேர்மையும், வாயிலே உண்மையும்,
நீதியின் வழி சென்றிடும் கால்களும்,
அஞ்சிடாது தவறைத் திருத்திடும்
ஆற்றலும், பணம் காசு பதவியில்
கொஞ்சமும் பற்றற்ற குணமும்…நம்
கோவில் குளம் பழ மரபில் நம்பிக்கையும்,
வஞ்சம் எண்ணாத வாழ்க்கையும், கொண்டுளேன்.
‘மனிதனாக’ நடக்க முயல்கிறேன்!
வாழ்க்கைக் கிணறதன் பாதியைத் தாண்டித்தான்
வருகிறேன்; இளமைத் திமிர் வற்றிடும்
வேளை ஆரம்ப மாகி நகருது.
வெற்றி தோல்வி சராசரி யாகுது.
ஆழமான கவிதைக்கு என்னையே
அர்ப்பணித்து…வரும்படி தேட…என்
ஊழ்வினைப்படி வந்த உத்யோகத்தை
உண்மை நேர்மையோ டாற்றத் தயங்கிடேன்!
அதிகமாகவே ஆசைகள் பட்டவன்
அல்லன் யான்; குடும்பச் சுவை(ம) தாங்கவே
எது வரும்படி தேவையோ தேடுவேன்.
எதிர்வரும் நாளுக்காய்ச் சில சேர்க்கிறேன்.
எதற்கும் ஏங்கி அவாப்பட்டு மென்மேலும்
எவையும் தேடேன்; பிழைப்பொருள் சேர்த்திடேன்.
பதவி உயர்வுக் கெவர்காலையும் சுற்றிப்
பணிந்திடேன்; பழி பாவத்திற் கஞ்சுவேன்!
என்மேல் வேணுமென்றே குற்றங் காண்பதை
ஏற்றிடாது…என் சரியை நிரூபிக்க
என்ன வழியுண்டோ தேடி… எழுதுவேன்.
எண்பிப்பேன் எனை; எவரையும்
வீழ்த்திடும்
சின்னத் தனம் இலேன்.
பிழை தட்டிக் கேட்டுத்
திருத்த அஞ்சேன்; அநீதியின் பின் செல்லேன்.
என்னில் குறை காண்பார் எவரெனினும்…அவர்
ஏற்கு மட்டும் யான் என்னை நிரூபிப்பேன்!