யாரிடம் இங்கே அரசியல் இல்லை
யாரிடம் சுயநலம் இல்லை?
யாரிடம் மற்றோர் உயர்வதைப் பார்த்து
மனமெரியுங் குணம் இல்லை?
யாரிடம் போட்டி பொறாமைகள் இல்லை?
யாரிடம் ஆசைகள் இல்லை?
யாரிடம் ஆளும் விருப்பங்கள் இல்லை?
யாரிடம் தீ மனம் இல்லை?
யாவரும்… தாம்தாம் வளர்ந்தாலே போதும்
மற்றவன் என்னானால் என்ன
யாரெவர் மாழுவார் யார் கதிரை வீழும்
அடையலாம் பதவி என்றெண்ண
மோசமும் பண்ணவே முயலுவார்…பிழைகளை
மூடி மறைப்பர் தாம்…வெல்ல
முற்றாய் மறப்பராம் நீதி நியாயத்தை;
மூக்குடைவார்…அறம் தள்ள!
போட்டிகள் நூறு பொறாமைகள் நூறு
புரிந்து நடந்திடாப் போது
பொய்களே நீளும் புரட்சியோ நாறும்
புதிரை அவிழ்த்திடத் தேறு!
ஆட்டத்தின் நுட்பம் அனைத்தையும் காணு;
அறத்தை மறக்காதே வாழு!
அது உனைக் காக்கும் அதர்மத்தைச் சாய்க்கும்
அற நெறி தெரி…வென்று ஆளு!