உன்னுடைய வார்த்தைகள் உலவின
திசையெங்கும்.
உன்னுடைய வார்த்தைகள் உதிர்ந்தன அயலெங்கும்.
உன்னுடைய வார்த்தைகளை
ஒரு கவிஞனின் குரலாய்,
உன்னுடைய வார்த்தைகள்
இறைதூதனின் பேச்சாய்,
உன்னுடைய வார்த்தைகள்
ஒரு மந்திரப் பொழிவாய்,
உன்னுடைய வார்த்தைகள்
உயிர்ப்பாம்பை ஆடவைக்கும்
மகுடி ஒலியாய்,
மனக்கலக்கம் தணிக்கின்ற
சுக இசையாய், நம்பி….
யானும் பின் தொடர்ந்திருந்தேன்.
உன்னுடைய வார்த்தைகள்…
மாரீசப் பொய் மானாய்,
உன்னுடைய வார்த்தைகள் முழுப்
போலி நகைகளுமாய்,
உன்னுடைய வார்த்தைகள்
கண்ணை ஏய்க்கும் கானலுமாய்,
உன்னுடைய வார்த்தைகள்
உளம் கெடுக்கும் போதையுமாய்,
உன்னுடைய வார்த்தைகள்
உயிர்பறிக்கும் கொடுவிடமாய்,
எங்கும் பரவி…
எவர்க்கும் சவால்விட்டு…
பங்கப் படுத்தும் எம்பரம்பரையை
என்பதனை
இன்றறிந்தேன்;
அவற்றை இனங்காணா தித்தனைநாள்
“என்ன மயக்கத்தில் இருந்தேன் நான்”
என அதிர்ந்தேன்.
உன்னுடைய வார்த்தைகளின்
உண்மைச் சுயரூபம்,
உன்னுடைய வார்த்தைகளின் உள்நோக்கம்,
தீய எண்ணம்,
என்ன என அறிந்து…
என்னென்றதை வெல்லும்
உண்மைமிகு வார்த்தைகளை
எவரிடத்தில் உணர்ந்தறிவேன்?
என்றின்றும் தேடுகிறேன்;
எப்ப அதைக் கண்டடைவேன்?