குண்டு மாமழை கொட்டுகின்றது.
குருதி ஆறுகள் பொங்குகின்றது.
சண்டை ஏன் எதற்கின் றெழுந்தது?
சாவி னோலங்கள் மட்டும் கேட்குது.
விண்ணை முட்டிடும் வீடு,கட்டடம்
வீழ்ந்துமே சல்லிச் சல்லி யாகுது.
கண்கள் அஞ்சுது காண…மானுடம்
கதறி மாய்வதை யார் தடுப்பது?
அன்றி ருந்து எரித்த தீச்சமர்…
அணையும், மூழும், புகையும், பெருகிடும்.
என்றும் நூர்ந்திடா உள்ளப் பேய்ப் பகை
எதை அழித்தும் “யார் உயர்வு”? கேட்டிடும்.
இன்று மூண்டுள அனல் பரவி எவ்
இடங்களைச்…சுடு காடு ஆக்கிடும்?
வன்மம் ஆள்கிற காலம்… அப்பாவி
மக்கள் பற்றியார் எண்ணிப் பார்க்கினம்?
ஓர் இருவர், ஓர் குழு, தலைவரின்
உளத்தின் காழ்ப்பு, வன்மம், பகை,வெறி
நூறு நூறு உயிர், உடைமையை
நொடியில் கொன்று குவித்துக் களித்திட,
“யார் எவர் பக்கம்” என்ற அடிபிடி
யதார்த்தத்தை கன்னை பிரித்துச் சிதைத்திட,
போர் வளருது; வாழப் பிறந்தவர்
புதைக்க ஆளற்றுப் புழுத்தல்… தொடருது!
பாலை, சுடுமணல், பஞ்சம், குடிக்கநீர்
பற்றிக் கவலை யில்லை; பாவப்பட்ட
சூழலில்… சுற்றிப் படரும் புதுத் தணல்
சுட்டுப் பொசுக்கும் சாமானியர் வாழ்வை!
கார ணங்கள் ஆயிரம், லட்சமாம்…
கடைசியில் வெறுஞ் சாம்பல் மிஞ்சுமாம்.
மானுடம் வதை பட்டு அழிவதை
மாற்ற…கவிதை ஏதேனும் செய்யுமா?