கால விருட்சத்தில் காய்ந்தோர் ‘வருட’ மலர்
வீழ்ந்து உதிர்ந்தது!
விரிந்து ‘புது வருட’
மொட்டு மலர்ந்தது!
முகிழ்ந்து அது இனிமேல்
அட்ட திசைகளுக்கும் அருளும்
கருணைசெய்யும்!
நேற்றுதிர்ந்த வருட மலர் நினைவுகள்
அலையலையாய்…
ஊற்றுகளாய்ப்….பாய்கிறது உள்ளத்தில்.
அதன் நன்மை
தீமைகளை எண்ணித் தெளிந்து,
இலாபநட்டம்
பார்த்துத் திருப்தியுற்று,
கவலைப் படவைத்து,
வாய்த்தநன்மை ஏற்று,
வருத்தங்களை மறந்து,
இன்று பூத்த ‘வருட’ மலர் என்னென்ன
மணம் எழில் தேன்
கொண்டு வருகிறதோ
கூடி ‘வண்டாய்த்’ தொடர்ந்து,
‘வருட’ மலர் உயிப்பாக வாழும் நாட்களில்
நாமும்
தெரிந்து செயற்பட்டு,
தீங்கு பிழைகளுக்கு
முகம் கொடுத்து,
அதனை முகாமைசெய்யும் முறையறிந்து,
நகரவேண்டும்…
ஓரிடத்தில் நங்கூரம் பாய்ச்சாமல்!
ஆதியந்தம் ஏதென்று நாமறியா…
உயிர்ப்பிழக்கா…
கால விருட்சம் கழித்ததுகாண்
கோடி கோடி
வருட மலர்களை!
மலர்த்துமின்னும் கோடி கோடி
வருட மலர்களை!
இருநூறு தசாப்த
வருட மலர்களின் கதைகளை மட்டும்
அறிவோம் இதுவரை!
அடிக்கடி வரும் மாற்றங்
கணித்து மலர்த்திய இவ்
‘வருடக்’ கவின் மலரின்
குணமறிந்து நாமும் கொள்வோமாம்
நன்மைகளை!
வணங்கி வரங்கேட்போம்…
மாய்க்கும் அதெம் தீமைகளை!