ஏறி விலைஏற எட்டு மடங்காக
எங்கள் செவி கேட்டு அதிர
“எப்படிநாம் வாங்க?” இன்று பணம் வீங்க
ஏங்கி பொருள் தேங்கி.., அணுக
வேறு வழி இன்றி போசணையும் குன்றி
வெந்து வயிறெங்கும் புகைய
வீழ்கிறது வாழ்வு மேவும் பசி சூழ்ந்து
வேலெறியும்…. சாவு விளைய!
சோறு கிடையாது சோர்ந்திடுமோ தேசம்?
சூழும் தொழில் யாவும் நலியும்.
தூங்கிடுது ராவில் பட்டினியில்…நூறில்
தொண்ணூறு வீதம் நிதமும்.
மாறுபடு கொள்கை தீர்வருள வில்லை
யாரும் தரவில்லை வரமும்
மாழும் வரலாறு நாளை…வழிகாணோம்;
வாழ்ந்துயரும் எங்கள் கடனும்!
எங்களது காலில் நின்ற நிலை மாறி
‘இறக்கி’ நுகர்ந்து உறுஞ்சி
எண் திசையும் தாண்டி இலாபம் உழைப்பின்றி
இடாம்பீக வாழ்வில் கிறங்கி
தங்கி பிறர் நல்கும் தயவினிலும் பொங்கி…
தளைக்கலாம் என்று மயங்கி-
தாழ்வோம்; விலையேற்றம் கூடி…பசி ஆளும்!
சரி செய்வ தாரு விளங்கி?