மார்கழி

மார்கழி பிறந்தாலோ மனசெல்லாம்
குளிருறையும்.
ஈரலிப்பும், அடிக்கடி கசியும்
இளஞ்சாரலதும்,
இழகிய நிலமும்,
ஈரஞ் சிதம்பும் மண்
குழைவும், பிசுபிசுப்பும்,
கூதலும், குளிர்வாசம்
கொண்டுவரும் மென்காற்றும்,
ஒளியை வடிக்கும் உயரக் கருமுகிலும்,
எங்கெங்கும் பூக்கும்எழிற் பூவகையும்,
அவற்றினிலே
தங்கித் தவங்கிடக்கும் தும்பி வண்டும்,
தவித்தபடி
குரல் கொடுக்கும் பட்சிகளும், குயில் கிளியும்,
தினம் முழுகி
பரவசமாய் மரஞ்செடியும்,
படுக்க… நனையாத
இடந்தேடும் விலங்குகளும்,
எட்டுத் திசைகளையும்
கழுவும் மழையும்,
காலைமுதல்..காற்றை ஆளும்
நம்மூரின் கோவில்களின்
நாத சுரம் தவிலும்,
அம் ‘மூலஸ் தானங்களிற்’ கேட்கும் மந்திரமும்,
சேமக் கலம் சங்கொலியும்,
ஆறுகால மணியதிர்வும்,
தேடிவரும் கற்பூர சாம்பிராணி வாசனையும்,
பூசைகளின் முன்பின்னாய்
பொழிகின்ற “அரோகராவும்”
தேவாரப் பண்ணும், பஜனைகளும்,
சொற்பொழிவும்,
மாரிக்குப் போட்டியாய் வரும்
’இசை விழா’ மழையும்,
பிள்ளையார் கதையும்,
திருவெம்பாக் காலத்தில்
பள்ளி எழுச்சியும்,
ஆருத்ரா தரிசனமும்,
அள்ளும் மனதையும் அயலையும்!
நம் ஊரில்
மார்கழி பிறந்தாலோ மனமெல்லாம்
சிலிர்த்திருக்கும்!
பாரம்பரியத்தின் பவிசுகளைப் போற்றி;
நம்
வேர்களை நினைவூட்டி,
வருடத்தை வழியனுப்பி,
வாற புதுத் ‘ தையை ‘ வரவேற்க
எங்களினை
மார்கழி தயார்ப்படுத்தும்!
எம் ஊரின் ‘வாழ்வினர்த்தம்’…
யார் என்ன சொன்னாலும்
எவர் எதைத்தான் செய்தாலும்
பாறிச் சரியாத
பரம்பரை விழுமியம்…
யாதென்று சொல்லும்;
நம்மை வழிப்படுத்தும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.