கேட்குது தொலைவினில் திருவெம்பா பாட்டு
கீற்றொளி கசியுது கீழ்த்திசை வானில்
கூட்டணி அமைத்தன குழலொடு தவிலும்
குயிலெனக் கூவிற்று மணியொலி நாதம்
வாட்டிடும் குளிரிலும் முழுகியே வந்த
மனம் உடல் உணர்ந்திடும் பரவசம் கோடி
வீட்டினில் சுருண்டு துயில்பவரே நீர்
விழி திறவும்…பள்ளி எழுந்திடு வீரே!
சாத்விகம் ஊற்றாய்ச் சுரந்திடும் காலை…
தன்னருள் அனைத்தையும் தந்திடும் வேளை.
பூத்திடும் பெருந்தொகை மலர்களும் மகிழ்ந்து.
புனிதமும் வாசமும் பொலிந்தது நிறைந்து.
தோத்திரம் இசைத்து சங்கூதியே இறையை
தொழுதனர் பலர்…மனம் கசிந்தது கரைந்து.
‘பாத்திரம் அறிந்தவன்’ பிச்சைகள் இடுவான்..
படுத்திருப்பீர்..பள்ளி எழுந்திடு வீரே!
தேடியும் கிடைக்கா தெள்ளிய அமுதே
தேறி இவ் வேளையில் சிந்தையில் அழைத்தால்…
தேடியே வந்து திகட்டத் திகட்ட
தீத்திடும் அருளே! தேடுதற் கரிய
ஆன்மிகச் செல்வங்கள் அளிக்குமிப் பொழுதே!
அறியாது காண்கிறாய் அரைகுறைக் கனவே!
ஊனுடல் உயிர் ஒளி பெற நல்ல வாய்ப்பு
உறவுகளே….பள்ளி எழுந்திடு வீரே!