சூரர்

உண்மைக் கெதிராய் உறுதியாய் நிற்பார்கள்.
நன்மை உலகில் நடக்கத் தடுப்பார்கள்.
தன்முனைப்பு, அகங்காரம்
தானெனும் ஆணவம், மமதை,
கொண்டு குதிப்பார்கள்.
அப் பாவிக் குடிகளினை
“என்செய்வார் இவரென்று”
ஏளனமாய் அடக்கித்
துன்பம் அருள்வார்கள்.
துரோகம் புரிவார்கள்.
நல்லோரை வாட்டுவார்கள்.
ஞானியரைத் தூற்றுவார்கள்.
தொல்லை ‘மெய் அடியவர்க்குத்’ தொடர்ந்து கொடுப்பார்கள்.
நீதி, அறம், தர்மம், நியாயத்திற் கெதிராக
வாதாடி வெல்வார்கள்.
மனம் உண்மை தனைஉணர்ந்தும்…
தாம் செய்வது தவறு எனத் தாங்கள் நன்கறிந்தும்…
ஆணவம் மறைக்க; அநியாயம் பல
புரிவார்.
தமக்கேற்ற சட்டங்கள் தயார்செய்வார்.
இயற்கை அறச்
சமநீதி தன்னைத் தகர்க்க நிதம்
முயல்வார்.
சரியான வழிசெல்லார்.
செல்வாரைத் பழிப்பார்.நன்
நெறிநில்லார்.
தாங்கள் நினைப்ப தெலாம் செய்வார்.
தாழ்ந்து பணியார்.
சத்தியத்தின் பின் போகார்.
ஆம் இந்த வலிய அசகாய சூரர்கள்
மாயவலை விரிப்பவராய்,
வலிமை படைத்தவராய்,
ஜாலங்கள் காட்டி மாய்க்கத் தருணங்கள் பார்ப்பவராய்,
நேர்மை மறந்தவராய்,
நியாயம் தவிர்த்தவராய்,
காழ்ப்பு வக்கிரம் வன்மம் கருத்தினிலே
கொண்டவராய்,
வாய்ச்சொல்லில் வீரருமாய்,
அடாத்தை வளர்ப்பவராய்,
ஏய்த்துப் பிழைப்பவராய்,
இதயங்கள் அற்றவராய்,
ஆசையின்பின் அலைபவராய்,
காமத்தில் அமிழ்பவராய்,
வேசங்கள் மாற்றி விழுமியத்தை விற்பவராய்,
“ஏழேழு லோகமும் எமது” என்று ஆர்ப்பவராய்,
பாவம் பழி பாராப் பாதகராய்,
பிழைவிட்டுச்
சாபங்கள் பெற்றாலும் அதைநினையாத் தன்மையராய்,
கோபம் மிகுந்தவராய்,
கொடுமை நிறைந்தவராய்,
காலம் இயற்கை கடவுட்க் கஞ்சாதவராய்,
“யார் என்னை என்செய்வார்” என்று
இறுமாந்தவராய்,
சுயநலத்தைக் காக்க
பிறர்நலத்தைக் கெடுப்பவராய்,
மயக்கி மிரட்டி அயல்
வளத்தைச் சுரண்டுவோராய்,
வாழ்வார்….பெருஞ் சூரர்!
வழிவழியே எங்குமென்றும்
சூழ்வார்…அவுணர்!
தோற்று இவர்களாலே
தாழ்வார் எளியோர்!
தருமத்தை மீட்டிந்தச்
சூரர்களை வீழ்த்தத்
தொடர் தவங்கள் இயற்றியே
சோர்வார் நரர், தேவர்!
துடிக்கும் அவர்க்கிரங்கி,
நீதியை நிம்மதியை நேர்வோர்க்கு
நல்குதற்காய்
சூரரை திருத்த நாடி, தூதுசொல்லி,
விஸ்வரூபம்
வானுக்கும் மண்ணுக்கும் காட்டிப்,
பயனின்றி
வேறு வழிதேடி,
விதியால் திருந்தாத
சூரர்களை வீழ்த்தத்
தோன்றிடுவார் கைகளிலே
வேல்பிடித்த வேலர்!
சுரர் வினையறுப்பார் ஆறுமுகர்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.