வரலாற்றை எழுதுதல்

நேற்றைய கதைகள் நிமிர்ந்த எம் மனச்சுவரில்
ஏற்கனவே எழுதிவைக்கப் பட்டன;
வரலாறாய்
மாற்றிவிடப் பட்டன!
வலிந்தவற்றை இனித்திருத்த
முடியாது;
அழிக்கவும் முடியாது!
இன்றைக்கு
நடக்கும் கதைகளை
நம் வலிமை, திறமை, மற்றும்
அயரா முயற்சியினால்
அழித்துத் திருத்தி
எழுத இயலும் எமக்கேற்ப;
அதை நாளும்
எழுது கிறோமா நம் நலம் எங்கள்
வளம் காக்க….?
என்பதுதான் பெருங்கேள்வி!
எதிர் நாளில் நடப்பவைகள்
என்னென்ன என்பது
எவருக்கும் தெரியாது!
அவையும் எமக்கேற்ப
ஆம் எங்கள் பெருமைகளை,
முகத்தை, முகவரியை
முழுதாகக் காட்டுமாறு
எழுதப்பட வேண்டும் என்பதுதான்
எமது அவா!
எழுத முடியுமா?
சரியாய் எழுதுவோமா?
வெற்றிடமாய் இருக்கும்
எதிர்கால மனச்சுவரில்
நற்கதைகள் தம்மை
நாமும் எழுதுவோமா?
யாரும் அழித்துத்
திருத்தாத மாதிரியாய்!
ஊருலகம் பார்த்து
வியக்கின்ற வகையினதாய்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.