மாரி இறங்கிவர, மண்ணும் இழகிவிட,
ஊரே குளிர்ந்து
ஒடுங்கிக் கிடக்க, நல்ல
நேரம் இதுவாக,
நெருப்புக் கோடை தணித்து…
வாற வருடம் மண்ணில்
நிழல் நிறைத்து…
வெக்கை தணிக்க,
விரும்பி மரங்களை யாம்
பக்கத் தயலெங்கும்
பசுமைபொங்க நாட்டுகிறோம்!
வீதி அருகு,
விளையாட்டு மைதானம்,
கோவில், பொது இடங்கள்,
கொல்லைப் புறம், என்று
நடுகின்றோம் நாற்றுக்கள்… நன்மரங்கள்!
பெரும்பனை
விதைகளை இடுகின்றோம்
வெளிகளில்!
புதுக் கதியால்
நடுகின்றோம் வேலிகளில்!
நல்ல தென்னம் பிள்ளைகள்
கொடுக்கின்றோம் விரும்பியவர்
கொண்டுசென்று பாவிக்க!
மரங்களை நடுகின்றோம்
மண்சுபீட்சம் பெறுவதற்கு.
மரங்களை நடுகின்றோம்
வடிவெங்கும் நிறைவதற்கு.
மரங்களை நடுகின்றோம்
மழைவீழ்ச்சி பெருகுதற்கு.
மரங்களை நடுகின்றோம்
எதிர்காலச் சந்ததிக்கு.
மரங்களை நடுகின்றோம்
வருங்காலம் செழிப்பதற்கு.
மரங்களை நடுகின்றோம்
இயற்கையைத் திருத்துதற்கு.
மரங்களை நடுகின்றோம்
வரலாற்றை சொல்வதற்கு.
மரங்களை நடுகின்றோம்
மரித்தோரை நினைவுகூர்ந்து.
மரங்கள் நிதம் கிளைத்து,
வரையறைகள் ஏதுமற்று,
வளர்ந்துகொண்டே போகும்!
வயது, ஆயுள் வரம்பிலாது
வளர்ந்த படியிருக்கும்!
மரண அச்சம், ஐயம் அற்று
வளர்ந்து நிலைத்திருக்கும்!
மரித்தோர் நினைவுகளும்
வளர்ந்து கொண்டே இருக்கும்…
இன்று நடும் மரங்களுடன்!
வளரும் இம் மரங்கள்…
கலக்கும் நம் வாழ்க்கையுடன்!