காலை விடிகாலை காலும் பனியூறி
காற்றுஞ் சிலிர்ப்போடு நகரும்.
காதில் ‘திருவெம்பா’ கானம் விழும்போது
காய்ந்த மனங்கூடக் கரையும்.
சூழும் இருளுக்குள் தோன்றும் ஒளிதீபச்
சூடு உயிரெங்கும் பரவும்.
சொர்க்கமதைக் கண்முன் காட்டும் சிவரூபம்.
தொட்டுக் குழல் நாதம் வருடும்.
வீதியொடு காற்றும் சூழலும் விறைத்து
விண்ணும் உறைகின்ற பொழுது.
வெள்ளமொடு சாரல் தூவும் முகில் மேகம்
மேனியினைப் பார்க்கும் பழுது.
சோதியென மின்னும் சொக்கனது பார்வை
தொற்ற விழிரெண்டும் அழுது,
சோம்பல் முறித்தாடும் துள்ளி இசை பாடும்
சோதனையைத் தாண்டும் மனது.
நாதசுரம் சங்கு சேமக்கலம் என்று
நாலுவித ஓசை ஒலிகள்.
நம் செவியில் வீழ்ந்து நம் உள அழுக்கு
நஞ்சுகளை கொள்ளும் பலிகள்.
காதலுடன் வேண்டிக் கண்கசிந்து பாடி
கற்பனை கடந்த உலகில்
காணும் சுகத்திற்கு ஈடு இணையில்லை
கன்ம வினை நீறும் எதிரில்.
எங்கள் நிலம், எங்கள் வாழ்வு, வழிபாடு,
எங்கள் மரபு, எங்கள் கவிதை,
பொங்கும் புனிதங்கள், அர்த்தம் பல சொல்லிப்
பூக்கவிடும் எங்கள் மனதை.
சங்கை மிகு வாழ்வை வாழ்ந்தவர்கள் நாங்கள்…
சந்ததி சுமக்கும் கனவை,
தள்ளிவிட மோதும் தீமைகள்.. அகற்றி
தளைக்கவே வைப்பம் நனவை.