சற்று ஓய்ந்து கிடந்து…மறுபடி
சாரை சாரையாய்க் கொட்டும் மழை! நிலம்
முற்றாய் ஊறிச் சிதம்பி நிரம்பியே
மூழ்கிற்று; வீடு, வயல்கள்,தெரு,குளம்
வற்றாக் கிணறுகள் யாவும் நிறைந்தது.
மனங்களும் ஈரஞ் சுவறி நடுங்குது.
சுற்றி வெள்ளம் சுருண்டு படுத்தது.
துரத்தி அதைஓட்ட என்னதான் செய்வது?
வான் கதவுகள் யாவும் திறபட
மடைதிறந்து ஊர் மனைகள் வெளிகளில்
ஆணவத்துடன் பாய்ந்து வரும் வெள்ளம்.
அணை தகர்த்திட ஏங்கும் அதன் உள்ளம்.
மானுடர்கள் அடாத்தாய் மதில் கட்ட,
வாய்க்கால் வழிகளை வீதிகள் ஆக்கிட,
வானமுதமோ தேங்கி நஞ்சாகுது!
மாரியில் வாழ்வு பந்தாய் மிதக்குது!
ஏங்கி வரட்சியில் எங்கே எனத்தேடி
இளைத்தனம்; இன்று அளவுக்கு மீறியே
தேங்கியும் பாய்ந்தும் திசையை மிரட்டியே….
செழித்த வாழ்க்கை அழுகிட வைத்துமே…
தீங்கிழைக்குமாம் தீர்த்தம்; அதைத்தேக்கித்
திரட்டி நிலத்தடி நீரளவேற்றிட
நாங்கள் முயலோம்…கடலுக் கனுப்புவோம்.
நலிந்து நிவாரண வரிசையில் நிற்பமாம்.