மெய்

மெய்யென்று சொன்னது பொய்யாகிப் போனதே
மேனியைத் தீ தின்றதே!
மீட்டிய நினைவுகள் மட்டுமே மிஞ்சுதே
மெய்யுடல் இன்றில்லையே!
ஐயகோ எத்தனை அழகு புனைந்தனம்
அடிக்கடி குளிப்பாட்டியே
அருமருந் தூட்டினம் அசற் சத்து சேர்த்தனம்
அனைத்திற்கும் பலனில்லையே!

எத்தனை கற்பனை, எத்தனை கனவுகள்,
எதிர்நாளில் என்செய்வது
என்றிடும் திட்டங்கள், நாளைக்காய்ச் சேமிப்பு,
ஏக்கம், இயக்கும் ஆசை,
எத்தனை முற்காப்பு, எத்தனை தற்காப்பு,
எத்தனை காப்புறுதிகள்,
இத்தனை கொண்டாலும் ‘தான்’ என்ற
எண்ணத்தை
ஏய்த்துச் சாவே தின்றது!

மெய்யென்று நம்பினோம் பொய்யாகிப் போனது
வீழ்த்திற்று வந்த மரணம்.
வேண்டிய சாபம், வரங்கள் மறைந்தன
வெந்தது அற்ப உடலம்.
ஐயம் அகலலை, வெற்றிடம் தோன்றலை,
அருளிற்று வந்த ஜனனம்.
ஆம் தோன்றும் மேனிகள் பொய்; இந்த வையகம்
அழியாது ‘மெய்’யென் றியங்கும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.