சோத்துக்கு வழியில்லை. சோதனைக்கு முடிவில்லை.
சோத்தியாய்த்தான் நாடு…ஆனால்
சோடனைக்குக் குறைவில்லை.
தலையில் முடியில்லை.
வளர வழிகளில்லை.
விலைமிகுந்த கொண்டையுடன்
வேசத்திற் களவில்லை.
மாத்துடுப்பு ஏதுமில்லை.
வருமானம் போதவில்லை.
கூத்தாட்டம் பார்க்கக் கூட்டம் குறையுதில்லை.
எடுப்பதுவோ பிச்சை, எண்திசையும் தண்டல்…ஆனால்
படலைகளில் பந்தல்.
பாயாசம் கடன்பணத்தில்.
நேற்று நடந்ததெது? நீறியோர்கள் ஏன் போனார்?
ஏற்பட்ட வெற்றிடங்கள் எவை?
யார்க்கும் கவலையில்லை.
எவரை விழுங்குவது?
எவரிடத்தில் பிடுங்குவது?
எவரை விற்று வாழுவது?
என்பதிலே போட்டி நூறு.
வாழ வழிதேடி, மகிழ வரம் நாடி,
ஆளும் முறைபாடி,
அசையலை நம் மனம் கூடி!