யாருக்கும் மற்றவரைப் பற்றிக் கவலையில்லை.
யாருக்கும் ஏனையோர்கள் மீது
அன்பு, இரக்கமில்லை.
தானிருந்தாற் போதும்;
தன்குடும்பம், பிள்ளைகுட்டி,
வாழ்ந்துயர்ந்தால் போதும்;
வளரும் உறவு, சுற்றம்
தான் ஜெயிக்க வேண்டும்;
தன்பையே நிறையவேண்டும்;
தான்மட்டும் செல்வங்கள் சேர்க்கவேண்டும்;
வளமெல்லாம்
தானடைய வேண்டும்;
பூதமாய்த் தன் பணம் காத்து
ஊரூராய்ச் சொத்துக்கள் வேண்டிக்
குவிக்கவேண்டும்;
மற்றவர்கள் எக்கேடு கெட்டால் எமக்கென்ன?
மற்றவன் வலியில் துடித்தால் நமக்கென்ன?
மற்றொருவன் பட்டினி கிடந்து
நோய் பிணியினிலே
முற்றாய்ச் சிதைந்து
மூன்றுவேளைச் சோற்றுக்கும்
மட்டை அடித்து வாழ வழிகளற்றுக்
கெட்டழிந்தால் என்ன?
பசி தாகம் ஏக்கத்தில்
வாடி உதிர்ந்தாற்தான் என்ன?
மழலைகள்
போஷாக்கு இன்றிப் புகைந்திறந்தால் யார்க்கென்ன?
எந்த உயிர், ஏழை
இழிவுற் றிருந்தாலோ…
எந்த நரன் எதிலும் தோற்று விழுந்தாலோ…
எந்த மனிதன் தெருவிற் கிடந்தாலோ…
எந்த ஒருவன் வறுமையில் இடிந்தாலோ…
எந்த மகானும் பிணியில் நலிந்தாலோ…
எனக்கென்ன? என்று
இதயத்தை சுயநலத்தில்
நனைத்தூற வைத்து,
இரக்கம் பரிதாபம்
கருணை எதும் காட்டாது,
கர்ணனைப்போல் வேடமிட்டு,
கொடுப்பது போற்கொடுத்து,
குள்ளமனத் தோடேதோ
எடுக்க நினைப்பவரே…
தூண்டிற் புழு கொழுவி
சுறாக்கள் திமிங்கிலங்கள்
சுலபமாய்ப் பிடிக்க;
இருக்கும் பலம்பெருக்கி
இன்றைவிட இன்னும்
நிறையும் இலக்கெட்ட;
திருவை – புகழ், பதவியாக்க;
இருப்பவரே… தொண்ணூற்று ஒன்பது சதவீதம்!
அறிக இவர்களினால்
அதர்மங்களே மிஞ்சும்!
பிரதிபலன் பாராது
நொந்த பிறரில் இரக்கம்
மெய்க்கருணை, அன்பு,
மிகுகரிசனை, காட்டல்…
உய்யும் வழி பிறர்க்கு உரைத்தல்…அவர்க்குதவி
செய்தல்…சரிசமானம் அவரை வைத்தல்…
எனச் செயலில்
பொய்வேடம் பூணாமல்,
புவியில் மனிதநேயம்
வாழ உழைப்பவர்கள்…
வாரிக் கொடுப்பவர்கள்…
ஆள வருபவர்கள்…
உண்மை அருளாளர்கள்…
யாரோ… அவர்களாற்தான் வாழும்
புவித் தர்மம்!