“யாரும் தேவையில்லை” என்று யாருமிங்கு வாழலாம்.
யாரையும் வெறுத்து நீ…ஒதுங்கி நின்று ஆளலாம்.
“யாரையும் நாம் நம்பவில்லை” என்று பலரும் கூறலாம்.
“யமனும், நோயும் என்ன செய்யும்”என்றும் மமதை கொள்ளலாம்.
“காசு, பட்டம், பதவி,உண்டு” என்று நீ நினைக்கலாம்.
“காசெறிந்தால் யாவும் ஆகும்” என்று நீ விசுக்கலாம்.
ஓர் நொடிக்குள் நீ மயங்கிச் சாயின்… என்ன ஆகுமாம்?
உந்தன் கைகள் கால் இழுத்து வீழின் என்ன செய்வியாம்?
எந்த நேரம் என்ன நேரும் யாரும் சொல்லக் கூடுமோ?
எந்த வேளை என்ன ஆகும் தூர திருஷ்டி காணுமோ?
எந்தநாள் எது நடக்கும் சாத்திரங்கள் கூறுமோ?
இந்தக் கேவலத்தில் நீ தனித்து நின்று வெல்வியோ?
உந்தன் ஆணவம், திமிர்கள், காசு, பட்டம், பதவியும்
உன்னை என்றும் காத்திடாது; உன் உடம்பும் கைவிடும்.
உந்தனின் புலன்கள் எந்த நொடியும் செயலிழந்திடும்.
உந்தன் நாடி நரம்பு சோரின் உன்கால் கை மரத்திடும்.
‘அந்த நேரம்’ ஆதரிக்க வேணும் ஐயா ஓர் துணை.
அந்த நேரம் பார்க்க வேண்டும் உறவு, பிள்ளை, உன் மனை.
அந்த நேரம் ‘தூக்கிப்பறிக்க’, ஆறுதல்கள் சொல்லிட,
அருகிருக்கணும் குடும்பம்,சுற்றம், நட்பு, ஓர் பிணை.
இந்த நிலமை யார்க்கும் நேரும்; முதுமை தன்னிலே இணை…
ஏதுமற்றிருத்தல் தீது; உறவு சுற்றம் நட்பினை
சந்தியாது, பேணிடாது, இன்றிருப்பின் சோதனை
தனிமை தந்து…காக்க ஆட்களற்று…,வீழ்த்தும் நீ நினை!
அன்பு வைத்து ஆளு; ஊர்க்கு ஆதரவாய் நின்றிடு.
“யாவருமே வேணும்” என்று வாழு; உறவைப் பேணிடு.
‘உன்னைப் பார்ப்பார் நாளை’…என்பவர்க்கு நன்மை நல்கிடு.
உண்மை அன்பு அவர்க்கு ஈந்து உதவு வாழ்வும் தந்திடு.
உன்னை நம்பு இன்று; நாளைக்காய்ப் பிறரை நம்பிடு.
உன் தடிப்பு, ஆணவங்கள் உன்னைக் காத்திடாதது.
உன் இயல்பு ஆற்றல், தெம்பு, என்றும் துணைதராதது.
உனைச் சுமக்க நால்வர் வேணும்; எண்ணு…கூடி வாழ்ந்திடு!