ஆயிரம் ஆயிரம் அனற் சுவாலைக் கைகளினை
நாலு திசைகளிலும் நகர்த்தித்,
தன் கொதிப்பைக்
கோடையாக்கி, திக்குகளைக்
கொள்ளிவைத்தும் கொழுத்தி,
சூட்டை ஒளியைச் சுரக்கின்றான்
சூரியன் காண்!
நீட்டும் அவன் ஒளி வெப்பம்…
நிலங்களைப் பகலாக்கி,
வாழ்வினது மூலமாகி,
வனங்களை உயிர்ப்பாக்கி,
சீவராசிகள் பெருகிச் செழிக்க உரமாகி,
இருள்போர்த்த மர்மங்கள் துலக்கி,
இருக்கின்ற
பொருள்களுக் கொளியூட்டி,
பார்வைப் புலனுக்கு
அமுதூட்டி,
இயற்கையின் அழகை வெளிப்படுத்தி,
எமக்குமட்டும் அல்ல
எல்லா உயிர்களுக்கும்
ஆதார சுருதியாய் அமைகிறது!
‘அவன்’ கருணை
உலகின்ஒவ் வோரிடமும்
ஒவ்வோர் அளவுகளில்
கலக்கிறது சுவாலைக் கரங்களில் இருந்து; இப்போ
அவனின் நெருப்புக்கை
எம் அயலை மிகநெருங்கி
அளைகிறது;
கல்லோடு மண்ணும் கனல்கிறது!
புல்லும் மரமும் பொசுங்கிடுது.
பறவை, பட்சி
எல்லா விலங்குகளும்
எரிகுளித்து மிகவாடி,
பொல்லாச்சூ டிருந்து தப்ப
பொந்துகளைத் தேடிடுது!
வறுபடுது திசைகள்;
தரை கொதிக்கும் தாச்சியாக,
இருக்கும் நீர் சூடாகி ஆவியாக,
காற்றும் தான்
எரியும் தணலாக,
“எங்கு நிழல்” எனத்தேடி
கானல் தான் கண்முன் கவிய,
புளுக்கத்தில்
வேர்வையாய் இரத்தம் வெளியேற,
உடல்வரண்டு;
காய்ந்து தோல் கறுத்து;
தாகம் தணிப்பதற்கும்
எரிகின்ற மேனியினை…
இடிக்கின்ற தலையை…
பொறிகலங்கும் கண்களினைப் பூக்கவைக்க,
நீர்தேடித்
திரிகின்றோம்!
மனம் வேக, சினம்பொங்கி அலைகின்றோம்!
“எம்பக்கம் தடவும் எரிகரத்தைத்
திருப்பியெடு;
நிம்மதி தா சூரியா..நாம் நீறுமுன்னம்;”
கெஞ்சுகிறோம்!