காரணி

ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு வித வாழ்க்கை.
ஒவ்வொரு உயிர்க்கும்
ஒவ்வொரு வகை வலிகள்.
ஒவ்வொரு உடற்கும் ஒவ்வொரு விதி,
துன்பம்.
ஒவ்வொரு வருக்கும்
ஒவ்வொரு சுகம், இன்பம்.

எல்லோரும் சுகம் எல்லாம்
கண்டு களித்ததில்லை.
எல்லோரும் எல்லா வகை மகிழ்வும் கொண்டதில்லை.
எல்லோரும் எல்லா இடரும் சந்தித்ததில்லை.
எல்லோரும் எல்லாத் துயரும்
அடைந்ததில்லை.
ஒவ்வொருவர் ரேகை, முகம்
அவரின் தனித்துவம் போல்…
ஒவ்வொருவர் வாழ்வின் உயர்வுதாழ்வு,
இலாபநட்டம்,
ஒவ்வொருவர் அனுபவிக்கும் இன்பதுன்பம்,
நோய்நொடிகள்,
ஒவ்வொருவர் வெற்றிதோல்வி,
ஒவ்வொருவருக்கும் வேறு!
எவ்வளவு திட்டங்கள் இட்டு
முயன்றாலும்
அவ்வளவும் தோற்பவரும்…
எதும் திட்டம் போடாமல்
செவ்வையாக ஏதுமே செய்யாமல்,
தொடர்வெற்றி
அள்ளுவோரும் உள்ளார்கள்!
“அவரவரின் பிராப்த” மெனச்
சொல்லுவோர்கள் உள்ளார்கள்!
“நேற்றோ முற்பிறவியிலோ
செய்த வினை”யென்று
செப்புவோர்கள் உள்ளார்கள்!
“பொய், புரட்டு – விதி” என்னும்
புரட்சியாளர் உள்ளார்கள்!
“உய்யும் வழி – முயற்சி உணர்”
என்போர் உள்ளார்கள்!
தீர்மானம் செய்கின்ற ‘காரணி’
எதுவென்று
தீர்க்கம் தெளிவாய்,
முடிந்த முடிபாய்,
யாரும் எதும் அறிவதில்லை என்பதுதான்…நிஜம், யதார்த்தம்!
அவரவர்கள் தம்தம் அனுபவம்,
நம்பிக்கை,
எவரெவரோ எழுதிவைத்த ஏற்பாடு,
விதி, என்று
வாழ்கிறார்கள்…யாரும்
அறிந்ததில்லை வாழ்வினர்த்தம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.