பசுமைகள் பூசியே படரும் பொன் வயல்களும்
பரவி ‘இங்கிதம்’ தந்திடும்.
பலசாலி நானெனப் பவிசோடு முகம் காட்டி
பனை சுற்றி அணை போட்டிடும்.
கசிந்தூறும் கவிதையாய் அருளூறும் பொய்கையுன்
கழல் சுற்றிக் குளிரூட்டிடும்.
கலையாடும் தாமரை கலக்கும்; வெண் கொக்குகள்
கரைத்தோப்பில் குடிபூந்திடும்.
உசிர் கொண்ட இவ்வெழில் உறைகின்ற ‘பளை’யிலே
உலவ எழும் புகழ்க் கண்ணகி!
உறவு இட்ட பேரைப்போல் உயிர் ‘அறத் தீ’ என
உலகாட்டும் ஒளி ஜோதி நீ!
“பிழைவிட்ட பக்தனும் பிணம்போல வாழவே
பெருந்தீமை செய்வை” என்றார்.
“பிரகாச வடிவினைப் பரிகாசம் செயும் நெஞ்சில்
பிளம்பாகிச் சுடுவை” என்றார்.
விளங்காத பிள்ளையென் வினைதீர்த்தல் தனைவிட்டு
விளையாடித் துயர் தருவியோ?
விதிமாற்றிக், காத்திடும் விசையாகி,
என்வாழ்வில்
விளக்கேற்றிப் பூச் சொரிவியோ?
” எலும்போடு ஓருயிர் இயைந்ததாய் உன் கண்ணில்
இணைந்த பின் வேசங்களேன்?”
என ஒரு ‘தூதிலே’ இசைத்துன்னைப் பணிகிறேன்
எழு; பிழை பொறு நான் அழேன்!
அகிலத்தின் தாயென அனைத்துக்கும் பாலூட்டி
அசைத்தாட்டி நிற்பவள் நீ!
அரனது மேனியின் அரைப்பக்க இதயத்தில்
அமைந்து துடிப்பூட்டுவோய் நீ!
தகிக்கின்ற தீமைக்குத் தணலாகி; அப்பாவித்
தளிருக்கு…மழை மாரி நீ!
தலம் நூறு ஆயினும் தாயன்பு ஒன்றென்று
தனையரைப் பார்ப்பவள் நீ!
மகிமையால் ஆளுமுன் மடிதேடி வந்த என்
மனமேறி அமர்; காட்டு மெய்!
மடியாத புகழ் கொள்ள, மலமான பிழை, மாயை
மறைத்தென்வாய் உனைப் பாட வை!