பன்னிரெண்டு கண்திறந்து பார்

பன்னிரெண்டு கண்திறந்து பாவிகள் எங்களினை
இன்றைக்குப் பாரைய்யா!
என்றென்றும் பாருமையா!
நெற்றிக்கண் நெருப்பிருந்து நிலைத்து , ‘மும் மல’ அசுரர்
பற்றி எரியவைத்த பரம்பொருளே… இன்று நம்மில்
தொற்றும் துயரெல்லாம் சுடு;
நின் ஈராறு
தீவிழியால் எங்கள் திசையெட்டின்
இடர்,தடைகள்
நீறவைத்துன் தெய்வ நிழல்மடியில்
எங்களினை
ஆறவிடு;
புறத்தின், அகத்தின் இரணம் காயம்
மாறவிடு;
அயலெங்கும் மனிதநேயம் ஆளவிடு;
ஞான அருள்மழையை நாளும் தீர்த்தமாய் நல்கு!

துன்பத்தில் தோய்ந்து,
துரோகம் போட்டி, பொறாமையில்
“அண்ணனென்ன தம்பியென்ன” என்று
முட்டி மோதிப்
புண்பட்டு, அன்பின் புனிதப் பொருள்மறந்து,
இன்று அறம் தர்மம் ஏதென்று தெரியாது,
சின்னத் தனங்கொண்டு,
செல்வம் திரண்டுவிட்டால்…
ஏதும் உயர்வுகண்டால்…
“என்னை எவர் கேட்பர்” என்று,
மோதும் மமதைகளின் மூக்கைஉடை!
புது அவுணர்
கூடுகிறார் விதவிதக் கோலத்தில்
அவர்களது
வேடம் களையவந்து வேல்வீசு!
நீதான் எம்
நம்பிக்கை நதிமூலம்;
நம்கால்கள் நடைபோடத்
தெம்பருளும் பெருந்தெய்வம்;
தேடும் எம் விழியிருளைப்
பந்தாடும் ஒளிமுதலும்;
பார்த்துத் தடுத்தாட்கொள்ளு!

நேர்மையாய் நின்று,
நியாயக் கடன்செய்து,
வேர்வை உகுத்து, விசுவாசமாய் நடந்து,
ஆர்வமொடு உடல்பொருள் ஆவியும் அர்ப்பணித்து,
நீயேதான் தஞ்சமென நினைந்து,
உனைநம்பும்
சீவன் களுக்குமட்டும் சிந்தனையில்
வேதனையேன்
தாறாய்? அன்பர்க்கே சோதனைகள் நித்தநித்தம்
ஈவாய்.
அவர்கள் ஏன் தவித்துத் துடிக்கவைத்தாய்?

பன்னிரண்டு கண்திறந்து பாரைய்யா!
அன்றுமின்றும்
உன்னருளே எங்கள்
உயிர்க்குத் துணை; பொய்யா?
“நாம்” என்ற ஆணவங்கள் நலியவைத்து,
“கதிநீயே
தானெ”ன்ற சேய்கள் தளைக்கவைத்து,
அடியவரைக்
காத்தருள்வாய் நல்லைக் கந்தையா!
அசுரகுணம்
சாய்த்து அமைதிகொடு சகலருக்கும்
ஆறுமுகா!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.