கிளியானதென் மனது

சூழ்ந்த பகற்திரவம் சொட்டுச் சொட்டாய் வடிய,
சூழும் இராத்திரவம் துளித்துளியாய்
வழிந்துவர,
பொன்னந்தி கருக,
மைம்மற் புகார் மூட,
மென்குளிர்க் காற்றுவீசி மேனி
சிலிர்க்க வைக்க,
வானும் கறுக்க,
மழைமுகிலும் திரண்டிறங்கும்
நேரத்தில்;
நல்லூரின் நெடுந்’தெற்கு’ வீதியினில்;
சாம்பிராணித் தூபமொடு
கற்பூரச் சட்டிகளில்
தோன்றும் கரிய புகை
சூழலைப் புனிதமாக்க,
வாசச் சுகந்தங்கள் மனநாசியை வருட,
ஆறுமுக வாசலில்…
தென் ‘கிளிக் கோபுரத்தில்’…
‘அருணகிரி’ முன்றலில்…
‘கந்தர் அனுபூதி’
வரிசையாய்ப் பாடி
அதன்பொருளை வசனமாக
உரைசெய்து… கேட்போர்
உளம் உயிர்க்கும் படி ஓதிக்
குருக்கள் குரல்…தேனைத் தினையில் குழைத்தருள,
நாதசுரம் பதிலளிக்க,
நற் ‘பஞ்சாலாத்தித்’
தீபச் சுடரில் சிரித்தது வேல்!
கிளிவடிவில்
கோபுரத்தில் ‘அருணகிரி’ குரல் அசரீரியாகக்
கேட்க…
தவிலின் இலயமும் கிறங்கடிக்க…
பறக்கும் மயிலில் வேல்
பச்சைக் கிளிகளிலே
இருமனையரோடு வந்திச் சூழலிலே சொக்கிநிற்க…
பரவசத்தில் அடியவர்கள் ‘பரமபதம்’ காண…
பறந்து சென்று என்மனமும்
கோபுரத்தில் கிளியாச்சு!
உருகிற்று உயிரும் உடலும்
திருவிழாவி லின்று!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.