திரு நல் லையதன் திருநாள் களிலே
திசைகள் அளந்து தினம் சுற் றிவரும்
கருணைச் சுடரே! கதியற் றுழல்வோர்
கவலை களைநீ களைவாய் களையாய்!
எழிலின் ஒளியே அறிவின் வெளியே
இயங்கும் இருசக் திகளும் துணையாய்,
எழும் ஞான சுடர் வடிவேல் முருகே!
இடறும் தடைகள் சுடுவாய் உடனே!
கடலாய் அடியர் கழலில் தொழவும்
கருதா தினியும் நகரல் முறையோ
“விடை சொல்” எனவே விழும் அன் படியார்
விழிநீர் துடை நெஞ்சிடி தீர்த் துதவு!
விதியின் வடிவே! வினை உன் செயலே!
விருதும், பழியும் தருகின் றவனே!
உதிரா தெமையும் உயிர்ப்பித் தருளும்
உறவே; உயிர்கொண் டுலவும் பொருளே!
மனதில் தொடரும் மயக்கங், குழப்பம்,
வலிகள், தமைநீ வடிகட் டிடுவாய்.
நனவில் மமதை தனில் ஆடுகிற
நலிவைத் தடு; ‘மும் மலச்சீழ்’ துடை வா!
எவரும் சிறியர் என எண் ணி அவர்
இதயம் தனை நொந்திடச் செய் திடுஞ் சொல்,
“அவர்கள் அசடர்” என யா வரையும்
அளக்கும் மமதை, அழி; மாற்று எமை!
மரணம் எனுமோர் மருமம் தொடர்ந்தே
வரும்; நின் வடிவே லதனால் அரண்செய்!
‘இருந்தான் அட நேற் றிலை இன்று’ எனும்
இயல்புள் ளபுவி இதுள் ஆண்டிட வை!