இருபத்து நான்கு ஆண்டின்பின் இன்று….

அந்த இனியகாலம் அகன்று மறைந்துபோய்
இன்று ‘இருபத்து நான்காண்டு’!
‘அது’ எங்கள்
வாழ்வின் வசந்தகாலம்.
மனம் துள்ளிக் குதித்த காலம்.
கால் கையில் தளைகளற்று,
கனவுகளில் சிறகடித்து,
“எல்லாம் இயலும் எம்மாலே”
எனும் கர்வம்
உள்ளியக்க
வெளியே உலகளந்த புழுகத்தில்…
எல்லாமும் சித்தித்த தென்ற இறுமாப்பில்…
“நாளையென்ன” என்ற
கவலையற்ற ஓர் துணிவில்…
போர் நடந்த நேரத்தில்…
‘பொருட் தடைகள்’ நீண்டிடையில்…
ஏதும் பெரும் வரவு இல்லாத கஷ்டத்தில்…
எட்டி நடந்து
இடர் கடந்து துணிந்து கற்று
‘பட்ட தா ரிகளாய்’மாறி பறந்தபசும் பொற்காலம்!
எத்தனையோ அறிஞர்கள், எத்தனையோ மேதைகள்,
எத்தனையோ பேர், ஊரில் இருந்தாலும்….
எங்களையும்
“பட்டதாரிகள்” என்று பக்கத் திருந்தவர்கள்
சற்றொதுங்கி நின்று
வியந்து பார்த்தார்கள்! ‘யாழ்
விஞ்ஞான பீடத்தின்’
விழுதுகள் யாம்… என்பதனால்
மெஞ்ஞானம் பெற்றிருப்பர்
என்றும் நினைத்தார்கள்!

உயர்கல்வி ஏணியில்
ஓர்படி கடந்ததற்கே
அயலிலன்று பாராட்டு…
உறவுகளின் ஆராத்தி…
பட்ட தாரி மாப்பிள்ளை பொம்பிளை
என இணையைத்
திட்டமிட் டிணைக்கத்
திரிந்ததொரு கூட்டம்…
“பல்கலையில் கற்றவர்கள்;
பல்கலையும் கற்றவர்கள்;
வல்லவர்கள்” என்று வணங்கிற்றடா… சமூகம்…
வல்லவர்தாம்;
பட்டை தீட்டிய வைரங்கள் தாம்;
பல்வேறு பதவிகட்கு அடிப்படை
ஓர் பட்டம்…அதால்
முதலாம் படிக்கல்லாம்… இதனில் முயன்றேறி
விதவிதமாய் வேலைகளில்
விளைந்தோம் நாமெல்லோரும்.
கைகளிலே சம்பளம்.
கெளரவத் தொழில், வாழ்க்கை.
உய்தது குடும்பம்.
ஒருசிறிய காலத்துள்
காதலித்த கம்பஸ் காதலர்கள் கைபிடித்து,
‘தேடி’ மற்றோர் திருமணம் செய்து,
கொழுத்த
சீதனமும் பார்த்து,
வீடுவாசல் வாகனங்கள்
சேர்த்துக், குழந்தைபெற்று,
செழித்த பதவிகண்டு,
ஒப்பீட் டளவில் ஏதோ ‘உயர்வோடே’
இப்போ நாமிருக்கின்றோம்!
‘இருபத்தைந் தாண்டுகள்’ முன்
எப்படி இருந்தவர்கள்
இப்படி இன்றிருக்கின்றோம்!

எப்படி மறக்க ஏலும்?
எமை வரவேற்ற பீடக்
கட்டடங்கள்,
‘சீனியர்சின்’ கத்தல் உறுக்கல்கள்,
“நாம் பெற்ற இன்பம் நீங்களும் பெற வேணும்” என்ற
‘ராக்கிங்’ ரகளைகள்,
‘Wel come party’ அன்பு,
ஆம் அதற்குப் பின்பு
அச்சம் பயமற்று
ஆசுவாச மாக இரசித்தாழ்ந்த
விரிவுரைகள்,
ஆதர்ச மாக அறிவை புகட்டிய நம்
பேரா சிரியர்கள், ஆசான்கள், அழித்தழித்து
ஓர்படத்தை கீறவைத்த ‘Demo’ மார்,
இன்றுவரை
அமரராகி நினைவில்நிற்கும்
Prof V.K.G, பத்மினி Miss,
Prof திரு திருமதி மகேஸ்வரன், Prof சித்ரவடிவேல் Sir.
சில Lecture களில் தூக்கம்,
சிலவற்றில் கலகலப்பு,
சிலவற்றில் ‘திருதிரு வென
முழித்ததாய்’ நினைவு,
நாங்கள் கலாய்த்த Lectures மாரின் Styleகள்,
நாங்கள் கதையளந்த கல்இருக்கை,
‘மூன்று துறை’
ஆய்வு கூடங்கள்,
அதில் காலை முதல் மாலை
வரை…பட்ட பாடுகள்,
விட்ட பகிடிகள்,
Disection படபடப்பு,
Titration தவிப்புகள்,
விரிவுரைக் கிடையில் சிரித்துக் கதைத்தவைகள்,
எத்தனை கிண்டல்?
எத்தனை கடி, joke கள்?
எத்தனை நக்கல்?
எத்தனை சீண்டல்கள்?
எத்தனை சச்சரவு?
எத்தனை கோப தாபம்?
எத்தனை சண்டைகள்?
எத்தனை சமாதானம்?
எத்தனை உயிர்ப்பு?
எத்தனை வகைச் சிலிர்ப்பு?
ஈர்த்து நின்ற நட்பு,
இடைக்கிடை சில காதல்,
சோடிகளாய் வந்தவரின் சொப்பனங்கள்,
வாரவாரம்
‘Tute’ எழுத அலைந்த துயர்,
‘Group study’ அலப்பறைகள்,
‘Continues assesment’ கள்,
‘Practical exam’,
‘Spot test’ இன் ஒவ்வோர் ‘மணியொலிக்கும் சுற்றியோட்டம்’,
‘Otolith’ சரிதம், ‘Specimen collection’ னுக்காய்
Field visit என்றுள்ளூர்க் குளம் கடலைப் பார்த்த சோகம்,
Library பொழுது,
Canteen சுவைகள்,
வேட்டுக்கள் வீதிகளில் விழவிழ
சோதனைச்
சாவடிகள் தாண்டி…
சாப்பயத்தை மீறிக்…
கற்ற கொடுமை,
‘கம்பஸ்’ I.C காட்டி
மண்ணெண்ணை வரிசையிலே நின்றநிலை,
எம் சக
வன்னிப் பெடிபெட்டை வான் கடலால்
கொழும்பு சென்றே
வந்த இடர், அடிக்கடி ஹர்த்தால்கள் ஊர்வலங்கள்,
சந்திகளில் Checking,
“சண்டை” எனும் செய்திகளுள்
ஒவ்வொரு ‘Semestar’ முடிய ‘exam’,
அதற்காக
எவ்வளவு முயற்சி? முடிந்த பின்
Vaccation,
‘விஞ்ஞான வாரம்’,
விளையாட்டுப் போட்டிகள்,
அன்று போட்டு..’பல்கலையை’ அதிரவைத்த நாடகங்கள்,
வென்ற கவிதைகள்,
விவாத அரங்கங்கள்,
பொங்கல்கள், Ponding, Vaccation சுற்றுலாக்கள்,
சைக்கிள்களில் ‘Batch mates’ இன்
வீடு வீடாய் சென்ற கதை,
நண்பியின் வீட்டிலும் தியேட்டரிலும் பார்த்தபடம்,
Toddy match, பிறந்த நாட்களிலே ‘தடைவெட்டு-
Roll Party’, ‘வாளி- Bucket’ வைத்து வழிந்து
திரிந்த சரிதம்,
Exhibition அனுபவங்கள்,
Room களில்…உருசி தவழ்ந்த, புகைப் பொழுது,
முரண்களிடை Going down…
முடிவில் வந்த பெருமகிழ்வு,
‘பட்ட மளிப்புவிழாப்’ பவிசு,
குழுப் படப்பிடிப்பு,
பட்ட மளிப்பைத் தொடர்ந்து
சிலநாட்கள்
பாராட்டு, party வைப்பு,
வேலைக்குக் காத்திருப்பு,
நேற்றுப்போல் இருக்கிறது…
நினைவுகள் எம் மனக்கண்முன்
ஊற்றாக ஓடிடுது!

“ஓம்..’95/96 Bio-
Stream’ இல் பயின்ற ‘இருபத்தாறு பேரில்’
ஆறு பெடியள்… ‘ஆறும் ஒவ்வொரு நரிகள்’;
மீதம் பொடிச்சிகள்…
விதவிதத் திறமையாளர்;”
அன்று மகிழ்ந்தஎங்கள் Batch இல்
அனேகமானோர்
எங்கெங்கோ போக…
சிலர்மட்டும் இங்குமிஞ்ச…
எங்கள் ‘கிருபாவை’ இழந்தபின்பு;
இருப்போரை
‘வற்சப்’ குறூப்பில் வளைத்துப் பிடித்தாலும்…,
கற்றகாலம் போல கடி பட்டு
குழந்தைகளாய்
ஓடிச் சிலபேர் ஒளிந்தாலும்…,
எம்நட்பை…
ஓர் ‘கால் நூற்றாண்டு’ கடந்த பின்னும்
‘பசுமையாக
ஊறும் நினைவுகளால்’ அடிக்கடி உயிர்க்க வைத்தோம்!
யாரும் நட்புகள் ஊர் வரும்போது
கூடி ஆர்த்தோம்!
இன்று ‘விஞ்ஞான பீடத்தின்’ ‘பொன்விழாவில்’
நண்பரொடும்… ‘நம் முன்,பின் Batch’களது அன்பரொடும்…
ஒன்றாக நின்றெம்
‘உருமாற்றம்’ கண்டுயிர்த்தோம்!

இன்றெங்கள் ‘மூன்றாம் அன்னை’ மடியான
விஞ்ஞான பீடத்தைப் பார்த்து
வியக்கின்றோம்!
எத்தனை தள மாற்றம்?
எத்தனை வித்தியாசம்?
எத்தனை வேறுபாடு?
இப் பீடம் சார்ந்தோரில்
எத்தனைபேர் ஊரில்? எத்தனைபேர் வெளிநாட்டில்?
எத்தனைபேர் தொடர்பற்று?
எத்தனைபேர் இன்றில்லை?

இன்றெங்கள் பீடத்தில் சுமார் ‘இருபதே வீதம்’
‘நம்மவர்கள்’ என்கின்றார்!
நம் நண்பர் பலரிங்கே
‘Academics’ உம் ஆகியுள்ளார்…
அவர்களுடன் கலந்தாய்ந்து
எக்காரணங்க ளாலே
எம் இளையோர் இங்குகற்கப்
பின்னடிக்கிறார் என்று பேசவேணும்!
உலகெங்கும்
உள்ள ‘யாழ் விஞ்ஞான பீட உறவுகள்’
“பெருமை மீண்டும்
கொண்டுவர என்னவழி” என்று திட்டம் கூற வேணும்!
சுமார் ‘கால் நூற்றாண்டு’ சுழன்றோடி
இன்றிணைந்த
எமது நட்புகளை,
இவர்களின் குடும்பத்தை,
அன்னவரின் உயர்வுகளை,
அவரின் நிலை பொறுப்பை,
கண்டு களித்து; பழங்கதைகளும் பறைந்து;
அன்பைப் பகிர்ந்து; அளவளாவ
வந்த இந்தச்
சந்தர்ப்பத் தினுக்கு நன்றிசொல்லி
“சளைக்கார்கள்
விஞ்ஞான பீட விளைச்சல்கள் என்றுமெங்கும்”
என்று நிமிர்ந்தோம்;
எம் பெருமையை உணர்வோம்;
எங்கெங்கோ இருந்துவந்த
எம்சோதரர் கையைப்
பற்றுகிறோம்;
நாளைக்கும் பற்றிப் பயணிப்போம்!
மற்றுமொரு வாய்ப்பிருந்தால்
‘பவள விழாவில்’ பார்ப்போம்!

த.ஜெயசீலன்
உயிரியல் விஞ்ஞானம்
95/96 பிரிவு.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.