காத்து நமையுயர்த்து!

நெஞ்சின் கவலையிடர் நீறவைத்து,
நம்மனதின்
சஞ்சலங்கள் சாய்த்து,
தலைகோதி மெய்வருடித்
தஞ்சமும் தந்து,
தழுவிடுவான் நல்லூரான்!

“அஞ்சற்க” என்றுரைக்கும் அவனின் ‘அபயகரம்’…
போரிடையும், நோயிடையும்,
பொல்லாத் தடை சுடவும்,
வேர்முழுதும் வாடி வீழா திருந்திடவும்,
காவலுக்கு நின்றது!
கருணைமழை பொழியுமவன்
‘பன்னிரு விழி’ முகில்கள்…
பஞ்சம் பசி வரட்சி
அண்ட விடாது அகற்றிற்று!
நம் தலைக்கு
வந்தவேட்டைத் தலைப்பாகை யோடு போக ஊதிற்று..
மந்திரத் ‘திருவாய்’.
மன்னனவன் ‘ஆறிரு கை
ஆயுதங்கள்’…,
அவனின் ஆழ்ந்தகன்று நுணுகியே
‘ஞான வடிவாகி’
‘எழுந்தருளும் வேல்”…,
நம்மைச்
சூழும் பகையை;
துரத்திவரும் பேய் பிசாசை;
ஆழ்மனதின் மிருக அரக்கக் குணங்களினை;
ஆறாப் பிணிகளை; அழித்திற்று!
எங்களது..
ஆசைகள் ஏக்கங்கள் அறிந்து,
பலம் அறிவு செல்வம்
தேவைக்கு ஏற்ப தெரிந்துவந்து,
நெஞ்சினது
பாரம் குறைத்து,
பரிந்து தீர்த்தம் நீறினூடு
நிம்மதியும்;
ஆற நிழல்மடியும்;
அமைதியொடு
செம்மை மிகுவாழ்வும்; செழிப்பும்;
திசைகளுக்குத்
தந்ததவன்
‘வாசல்’!
கேட்ட வரம்நல்கிற் றெழில்’வீதி’!
தூரத் தெரிந்து… துணிவு
நிம்மதி சுரந்து…
“யாமிருக்கப் பயமே”னென் றுரைத்தனகாண் ‘கோபுரங்கள்’!
எட்ட நாம் இருந்தாலும் “இருக்கிறேன்” எனச் செவியைத்
தொட்டு உசுப்பிவிடும்
‘ஆறுகாலப் பூசைமணி’!
உலகெங்கும் சென்றுவாழும் உண்மை அடியர்அன்பர்
“வழியில்லை வர” என்று வருந்தி
அங்கங்கிருந்து
நினைத்தாலே… வரமருளும் இங்கிருந்து ‘கோவில்நிழல்’!
“உன்கழலில் நின்றால் உதிரும் துயர்க”ளென்று
நம்பித் தினம்திரளும் நம்மவரைக்
கைவிடலை
‘சேவற் பதாதையும் சேவிக்கும் பொன் மயிலும்’!
பாவம் பழிவிரட்டும்
குகனினது ‘பிரசாதம்’!
வருடத்தில் தோன்றும் வசந்தமென வருகின்ற
‘திருவிழா’… மனம் உடலிற் தெம்பூட்டி,
மின்னேற்றி,
வருசம் முழுதும்வாழ்வில் வளம்பெருகச் சக்திதரும்!
ஈழத் தமிழரின் இணையற்ற விழா;
இதுவே
யாழின் கலாசார அடையாளம்;
என இந்த
ஊருலகம் போற்ற ஒளிர்கிறது அவனின்’புகழ்’!
“வேலிருக்க விதி கூட வீழ்த்தாது”
என்கிற நம்
‘ஆழ்மனதின் நம்பிக்கை’…
அர்ச்சனைகள் செய்து;
‘வைத்த
நேர்த்திதீர்க்கும்’ போது
நிறைவுதந்து நெகிழ்த்துதெமை!

வல்லவனே…
எங்கள் வரண்முறையை நெறிப்படுத்தி
எல்லாம் தருபவனே…
எம்குடி இடரிடையும்
பல்வேறு தடைதாண்டிப் பயணித்து
இன்றைக்கும்
‘நல்லா யிருக்கவைக்கும்’
நல்லூரின் நாயகனே….
இந்தக் கணம் வரைக்கும்
எமக்குத் துணைநிற்கும்
கந்தையா…
இந்தக் கவின் ‘திரு விழா’ நாளில்
வந்துவீழ்ந் துன்றன் மலரடியில் சிலிர்த்துநாம்
நன்றிசொன்னோம்!
நம்மவரின் ‘நிலையைத்’ தொடர்ந்து மேலும்
நற்கதிக்கு ஏற்று; நலிவகற்று;
புன்னகைப்பூ
பூத்து நிதம் வந்தெம் புதிரவிழ்த்திக் கணம்வரையும்
காத்ததுபோல்…. நாளையும் காத்து நமையுயர்த்து!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.