‘அலங்காரக் கந்தனுக்கு’ அனுதினமும்…
விதவிதமாய்
அலங்காரம்!
வெவ்வேறு அழகு நிற மலரில்
மாலை புனைந்து;’சாத்துப் படி’
வடிவாய்ச் சோடித்து;
‘சாத்துப் படி’க்கேற்ப தலைப்பா, குடை,
குருக்கள்
மாரினது ‘பஞ்சகச்ச’ வனப்பும், நிதம் மினுங்க…
அலங்காரக் கந்தனுக்கு தினமும்
திரு விழாவில் அழகு
அலங்காரம்; நல்லூரில் அதுதான்
தனித்துவமும்!
சாத்துப்படி உருவொன்றே… வேலுக்கும் தேவியர்க்கும்!
ஆனால்…
சோடனைகள்
தரும் எழில்,நிறத் தெரிவு,
நேர்த்தி, கற்பனை, புதுமை,
நெஞ்சை நிதம் கொள்ளைகொள்ளும்!
செவ்வரத்தை, பொன்னொச்சி, காட்டுமல்லிகை, அல்லி,
செவ்வந்தி, கொடி அலரி, கஸ்தூரி அலரி ,செவ்-
வலரி, கன காம்பரம், மரு, மருக்கொழுந்து,
இலாமிச்சை வேர், கமலம், குண்டு மல்லி எனச்சரியாய்
நிறங் கலந்து மாலைகட்டி;
நீலம் கபிலம் ஊதா
நிறங்களுக்கும் பூக்கள் நெடுந்தொலை விலிருந்து தேடி;
சிறப்பாகச் சூட்டி;
தெரிந்து நகை வகையாய்ப்…பொன்
உருத்திராட்ச மாலைகள்,
நவரத்னப் பதக்கங்கள்,
நாகபடம், நவீனரகக் காசுமாலை,
சங்கிலிகள்,
‘சூரிய சந்திரர்’ சுட்டி,
வைரத்தில் அட்டியல்கள்,
தூக்கங்கள், தொங்கட்டான்,
தூய தங்கக் குடை, சரங்கள்,
சாத்தவே..தங்கக் கிடங்காய்த்
தகதகென்று
கோடிமின்னல் ஜொலிப்போடு
ஒளிரும் எழுந்தருளி ‘வேல்’!
‘முத்துக் குமாரர்’, ‘ஷண்முகர்’
முக்கிய நாளில்
சுத்துகையில்… சோடனையோ
சொர்க்கத்தின் விம்பமாகும்!
‘தானனைத்து உயிர்க்கும்,
விலங்கு, பறவைகட்கும்,
காவலன்
யாவினிலும் உள்ளுறையும்
அத்வைதன்’
தான்…எனக் காட்ட மயில், அன்னம், ஆட்டுக்கடா, ரிஷபம்,
காராம் பசு, சிங்கம்,
மகரம், கிளி, யானை,
ஐந்து தலைநாகம், அசுவம்,
இடும்பன், எனும்
‘கொம்பு வாகனங்க’ளேறி;
மஞ்சம், கைலாய
வாகனம், தங்கரதம், பூச்சப்பறம், சப்பறம்,
தேரினிலும் சுற்றி;
அட்ட திசைகளதும்,
ஊர்களதும், அடியவர்கள்,
வாழும் உயிர்களதும்,
சேமங்கள் பார்ப்பான் திருவிழாவில்
கந்தன்!
ஊரின்….
பாவம் பழிதுடைத்து,
சாப விமோசனந் தந்து,
நானிலமுஞ் செழிக்கவைத்து,
ஞானப் பொருளுரைக்கும்…
‘அலங்காரன் – நல்லூரன்’
அலங்காரம் நிதம் இரசித்துச்
சிலிர்த்து,
அவனருளும்
செல்வங்களும் பெற்று…,’மும்
மலத்துயர்’ தணித்து,
வாழ்வில் நிம்மதி கண்டு,
மலர்வதை விட வேறு சோலி
எது நமக்கு?