காவல் தெய்வம்

காலனாக வந்து மண்ணில் வாழுகின்ற வைரவர்.
காவல் நின்று ஊரை வாழ்த்தும் ‘மண்டையோட்டு மாலையர்’.
சூலம் வீசி தீ நுதல்களாலே தீமை தீய்ப்பவர்.
தொல்லை செய்யும் மாய மந்திரம் துரத்திச் சாய்ப்பவர்.

நாயிலேறி நாலுதிக்கும் நாளும் சுற்றி மீளுவார்.
நல்லவர்களை மிரட்டும் பேய்கள் யாவும் ஓட்டுவார்.
கோவில் தேவையில்லை; சந்தி, எல்லையோரம் வாழுவார்.
குற்றம், பாவம் செய்பவர்க்குக் குட்டி…நீதி நாட்டுவார்.

ஞானவேலுக் கீடுகாண்…நிமிர்ந்து நிற்கும் சூலமும்.
நாட்டில் அந்நியம் படிந்த காலம்… வாழ்ந்த கூர் முகம்.
யாரும் மந்திரங்கள் சொல்லிடாது, நேரும் போதிலும்,
யாவும் நல்கும் சூலம்; வேலுடன் இணைந்த ஆயுதம்!

‘நல்லைக் கந்த சாமியாரின்’ காவல் தெய்வம் வைரவர்.
நஷ்டம், இன்னல் சூழ்ந்திடாமல் நன்மை நல்கு கின்றவர்.
நல்லையில் எடுக்கும் முடிவை இறுதி செய்வார் வாசலில்!
நனவில் கனவில் வந்து ஞானம் சொல்வார்; அன்பர் காதினில்!

நல்லை வைரவர்க்கே நாளும் கடைசிப் பூசை, தீபமும்.
‘நல்விழாவின் ‘முன்-பின்’ அன்னார் தருவார் ஆசி நேரிலும்.
‘வல்ல வடுகர்’ வாசல் அமர்; வருடும் தென்றல் நாள்தொறும்…
மனதின் சஞ்சலம் துடைத்துச்… ‘சக்தி ஏற்றும்’…தரும் இதம்!
.
சுட்டு, வடை மாலை கட்டி, சூட்டிச் ‘சூல பாணியை’
தொழுதுமே துதித்துப் பாடு தோத்திரங்கள்; வேதனை-
எட்ட ஓடும், வீரம் ஓங்கும், வெற்றி சூழும், “நீ துணை”
என்று நேர்ந் தடிப்பாய் தேங்காய்; சிதறும் சூழும் வல்வினை!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.