என் வாழ்வில்; நாற்பத்தைந் தாண்டின்மேல்…
யான் பிறந்த
என்நல்லூர் மண்ணிருந்து
‘எனக்கு நினைவு
என்று தெரியத் தொடங்கியதோ’ அன்றிருந்து…
கண்டு சிலிர்த்துள்ளேன்…
கவின் நல்லூர்த் திருவிழாவை!
இன்றுமெண்ணி மலைக்கிறேன்…
என்றும் வியப்புத்தான்;
என்ன விசயமென்றால்,
முன்பிருந்தோர் ‘பலரில்லை’
என்முன்பு;
அதேபோல
முன்பிருந்த ‘பல இல்லை’ என்முன்பு;
ஆம் அன்று
நின்ற சனங்கள்,
நினைத்த அடியார்கள்,
நடத்திய எசமான்,
நேர்த்திவைத்தோர், உபயகாரர்,
கொடியேற்றிய குருக்கள்,
உதவிக் குருக்கள்மார்,
கட்டியம் சொன்னோர், கொம்பு காவியோர், சறுக்குக்
கட்டைகள் போட்டோர்,
வடம் தொட்டிழுத்தவர்கள்,
நாதசுரம் தவிலிசைத்தோர்,
தேவாரம் பாடியவர்,
பூமாலை கட்டியவர், தூபங்களைப் போட்டோர்,
நாளும் பஜனை செய்தோர்,
நற்பிரசங்கம் வைத்தோர்,
காவடிகள் ஆடியவர்,
பிரதட்டை அடித்தவர்கள்,
தீச்சட்டி தூக்கியவர், அடியளித்தோர்,
பறவை, தூக்குக்
காவடி எடுத்தோர்,
கடமை செய்த தொண்டர்கள்,
கோவில் நடைமுறையைக்
குறையின்றி காத்தவர்கள்,
கூட்டித் துடைத்தவர்கள்,
குத்தி முறிந்தவர்கள்,
தாகசாந்தி செய்யத் தண்ணீரப்பந்தல் அமைத்தோர்,
இராப் பகலாய் நின்று குகனடியில் சரண்புகுந்தோர்
எத்தனைபேர்?
இவரில் இன்றிருப்போர் எத்தனைபேர்?
செத்தோரும், எங்கோ சென்று வதிவோரும்,
இயலா திருப்போரும், என்று… பலரகன்ற
பொழுதும்;
பலவாறு புறச்சூழல் மாறிவிட்ட
நிலையிலும்; வந்த
வெற்றிடங்களை நிரவி…
‘வழக்கங்களைத்’ தொடர புதியோரை உள்வாங்கி…
பழையகாலம் போல் பார்க்கும்
பக்கமெலாம் சனம்பெருக…
உளரோ எவர் இலையயோ
ஒரு கவலையும் அற்று
ஒளிர்கிறது அதே ‘வேல்’,
உயிர்த்துளன விக்ரகங்கள்,
அழியவில்லை மந்திரங்கள்,
அன்றைப்போல் இன்றும்தான்
ஒலிக்கும் அதே கட்டியம்,
ஓங்கார மணியோசை,
ஜொலிக்கும் எழில் நகைகள்,
வாகனங்கள், மஞ்சம்,தேர்.
வழிவழியாய்த் தொடரும்
மாறா நடைமுறைகள்,
அழகொழுகும் சோடனைகள்,
அர்த்தத் திருவிழாக்கள்,
செழிக்கும் தமிழ்,
சிறக்கும் கலை, தனித்துவம், மரபு,
எழில்குன்றா அதே புனிதம்,
ஈடாடா ஆசாரம்,
ஒழுங்கு, நேர முகாமை, எதிலும் ஒரு நேர்த்தி,
பொழியும் அதே கருணை,
பொலியும் அருள்,
தெய்வப்
பணிக்குப் பொருத்தமானோர்
எங்கிருந்தோ வந்துசேர
கணமும் பெருகும், கவின்,நவீனம்,
பிறர்க்கு
முன்னுதாரண மாகி
முகிழும் புது ‘முறை’கள்,
“யாரும் வருவார்கள் போவார்கள்
என்றென்றும்
யானிருப்பேன்” என்று
ஞானம் உரைக்கின்றான்
நல்லை நகர்க் கந்தன்!
நம் இயற்கைச் சமநிலையின்
உண்மைசொல்வான் குமரன்!
நாளையும் தன் எல்லையற்ற
வல்லமையால் உலகை
வசப்படுத்துவான் வேலன்!