வில்லங்கம் ஏதுமின்றி வெகு விமரிசையாக
‘நல்லூர்த் திருவிழா’
நடந்து முடிந்ததென
நிம்மதிப் பெருமூச்சு நிறைகிறது!
கடலாக
இம்மண்ணை மூடி
எங்கெங்கோ இருந்துவந்த
ஈசற் சனக்கூட்டம்
எங்கே பறந்துபோச்சு?
மனமெங்கும் வசந்தம் மலரவைத்த
இருபத்தேழ்-
இனிமைநாட்கள் எப்படிக் கழிந்ததெனும் ஆச்சரியம்
போன வருடம்போல்
எழுகிறது இம்முறையும்!
அடுத்தடுத்து நூறு, ஆயிரம் வியப்புகளை
இடைவிடாது பரவவைத்த எசமான்,
குருக்கள்மார்,
சிறுதொண்டர், பணியாளர்,
‘சிவப்புச் சால்வை’ அன்பர்,
“அப்பாடா” என்றாசு வாசமாய் அமராமல்…
இப்போ…’வழமைநிலை’ வர ஓடி இயங்குகிறார்!
தேர்முட்டி அடைபட்டு சீமெந்துக் கட்டுகட்டி
மூடியாச்சு.
மஞ்சம், கைலாச வாகனங்கள்,
போயின தம்தம் இருப்பிற்கு.
சப்பற
பூச்சப்பறச் சலாகை தடி பலகை கழற்றி
சீராய் அடுக்கியாச்சு.
சகடைகட்கும் பாதுகாப்பு
வேலி அமைச்சாச்சு.
வீதி உலா வாகனங்கள்
யாவும் அவையவற்றின் இடத்தில்
துணிச்சீலை
மூடி ஒதுக்கியாச்சு.
‘கொம்புகள்’ கவனமாக
அந்தந்த தளத்தில் மழைபடாமல் வைத்தாச்சு.
கொடித்தம்பம், குத்து விளக்கு, பூசைப் பொருட்கள்,
நடமாடும் மணி, கற்பூரவண்டி, ‘சிவப்புவெள்ளைக்
கொடிச் சீலை, கொடிகள்,
எங்கோ – அங்கு போயிற்று.
இந்தப் பராமரிப்பால் இவை பல ஆண்டுகளாய்
இன்றும் பயன்படுது.
களற்றிவைத்த வெளிவீதிக்
கம்பிவேலி,தூண்கள் கட்டி முடிகிறது!
இனிவழமை நாட்கள்.
இனி வழமைப் பூசை.
இனி வழமை ஆட்கள்.
இனி வழமை அமைதி.
இனிஏதும் இடைஞ்சல் இரைச்சல் புகைச்சலில்லை.
சனவெக்கை இனியில்லை.
சாமான் விற்ற சத்தமில்லை.
கலகலப்பு கிளுகிளுப்புக் கரைச்சலில்லை.
கோவிலுக்கு
வழக்கமாக வந்துபோகும் சிலரோடு
நாமுந்தான்
வழிபடுவோம்;
நெருக்கடிகள் ஏதுமில்லை!
இந்த முறை
வழமைபோல்…’புதுப்புது விடயங்கள்’
திருவிழாவை
ஒளிரவைத்து அடியாரை உவகைகொள்ள வைத்தனகாண்!
போய்வருவோர் ‘மணி அடித்துப்’ போன முன் இரும்புவேலி,
“பன்னிரெண்டு கையும் சேவற் பதாதையும்”
என்று வசந்த மண்டபப் பூசைமுன் ஒலித்த கானம்,
கொடியேற்றி கொடியிறக்கி சுவாமி உள் வீதி சுற்றி
வர…எட்டு மூலையிலும்
நடனத்துடன் தீபம்,
இரவுத் திருவிழாவில் ஒன்றையொன்று விஞ்சிய
நிற மாலைச் சாத்துபடி, வேல் புனைந்த தலைப்பாகைகள்,
வெளிவந்த புதுத் ‘தங்க வாகனங்கள்’,
நீண்ட…
வளைந்த… குழல் கொம்புப் பிளிறல்,
முன் மண்டபத்தில்
‘அலங்காரா – நல்லூரா’ வாசகம்,
அதை உரைத்த கோஷம்,
‘வாழ்க சீர் அடியரெல்லாம்’
என்ற பொதுப் பதாகை,
லோக ஷேமம்கருதி வெளி வீதியிலே
‘சாம வேதம்’,
ஆம் ‘பட்டித் திருவிழா’ வில் ‘ஆஸ்த்தான காளை’, நற்
‘பேர்’ பெற்ற பசுக்கள்,
அவைக்கு ‘விசேச வெண்பொங்கல்’,
கீரை கொடுப்பு,
கோபியர் நடனம், ‘கந்தர்-
சிறுவர் மாம்பழக் கடன்திட்டம்’
தொடர்ந்த
‘ஒரு முகத் திருவிழாவில்’
உலகம் வியந்து பார்க்கும்
“பரியேறி வாறார்” ‘பராக்’ கின்முன்
சிலிர்க்கவைத்த
திருவாசகப் பாக்கள்,
திகைக்கவைத்த சப்பறம்,
தேர்த்-
திரைச்சீலை நவீனம்,
திருவாசிகளிற் தங்கம்,
பெருந்தேரில் பவுண் தகட்டுப் பதிப்பு,
தீர்த்தத்
தினம் ஐந்து தங்க வாகனங்களில் சுவாமி
மினுங்கி வெயிலில் ஜொலித்தஎழில்,
‘சிருங்கார
மண்டபமாய்’ முன்வாசல் மாற…
ஊர் திரண்டிருந்து
கண்ட ‘திருக் கல்யாணம்’,
தாலிகட்டி முடிய
“குமார கல்யாண வைபோகமே”
என இசைத்த
செமகானம்,
என்று…சிறப்பு புதுமை பொங்கிப்
பொலிய; மின்னி முழங்கி
விரைந்துபோச்சு
‘இருபத்து ஏழ்நாள்’ எழில்விழா!
அடுத்தவிழா
வருமட்டும் இந்த வசந்த நினைவுகளை
இரைமீட்டு எம்மனங்கள்
இனிமை காணும்.
இதில் கிடைத்த
வரங்களினால் வாழ்வு மலரும்; வரும்
இடரை வெல்லும்.