என்னதான் மிஞ்சும்?

‘A’ வந்து போனார் இருநாளின் முன்; இங்கே
‘B’ வந்தார் நேற்று;
இன்றைக்குப் பின்னேரம்
‘C’ வந்து கூட்டம் போடுவதாய் அறிவிப்பு!
இந்தமுறை… ஆங்கில
இருபத்தா றெழுத்து தாண்டும்
எண்ணிக்கையில் ‘கேட்போர்’
“எனக்கு எனக்கு” என
வந்து… இதேதெருவில்
வாழும் ஒரே மக்களுக்கு
தங்கள் பராக்கிரமம்,
தங்களது வீரதீரம்,
தங்கள் எதிர்காலத் திட்டம், தாம்
தகர்த்துடைத்த
சாதனைகள், சொல்லிச்
செவியைக் கிழிக்கின்றார்.
ஒரே தெரு,
மக்களும் ஒரே ஆட்கள்,
சுற்றுகிற
தெருநாய்களும் ஒன்றே,
திரியும் காகம் குருவிகளும்
ஒன்றேயாம்,
மாறிமாறி ஓயாது படையெடுக்கும்
விந்தைமிகு வேட்பாளர்
விபரங்களைக் கேட்டு
என்செய்வ தெனமக்கள்
தலைமுடியைப் பிய்க்கின்றார்.
அனைவரதும் தேர்தல் விஞ்ஞாபனம், துண்டுப்
பிரசுரம், கலர்க்கலண்டர், வீடுகளில் இறைந்துளது.
சின்னங்கள் எவைகளென்று
சிந்தனை தடுமாற,
சின்னங் களுக்கு முகங்களை சரிநேராய்ப்
பொருத்துகிற போட்டியிலும்
குழம்புகிறார் பொதுசனங்கள்.
இரண்டுமூன்று கட்சியல்ல..
சுயேட்சைக் குழுக்களுடன்
மூன்று டசின் கட்சி!
அவற்றின் விருப்புவாக்கு,
“நான் நீ என்னிலக்கம் உன்னிலக்கம்,
மூவருக்கே
போடவேணும்,
சரியாயே புள்ளடிகள் இடவேணும்,”
என்ற பரபரப்பில்
வாக்காளர் திகைக்கின்றார்!
“ஏற்கனவே ‘பெருங்குழப்பம்’ இல்லாத
தேர்தல்களில்…
பட்சி களிடையும்
தொலைபேசி வகைக்கிடையும்
மட்டையானோர்…
என்ன வரலாறு படைக்கவுள்ளார்?”
என்ற பெருமச்சம்
எங்கும் இருக்கிறது!
என்னதான் மிஞ்சுமென்ற ஏக்கம்
பெருகிடுது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.