தேவர் துயரிடர்கள் தீய்க்கச் சிவன்விழியில்
ஆறு பொறியாய் அவதரித்து – தாமரைகள்
ஆறில் தவழ்ந்தே அறுமுகனாய் ஆனவனால்
ஊறு தொலையும் உணர்.
சூரர் கொடுமைசெய்ய.. சூரத் தனமழிக்க,
வீரத் திருவேல் உவந்தன்னை – ஆரத்
தழுவிக் களமனுப்பத் தானை நடாத்தி
முழுச்சுரரும் சாய்த்தான் முருகு.
வீரவாகு தேவர், நவவீரர், போர்த்துணையில்
தாரகன், சிங்கன், தமையனினை –
வேரறுத்து
மாயை, கன் மம்,மாய்த்து…
மாயாத ஆணவத்தில்
‘சேவல் மயில்’செய்தான் சேர்த்து.
மூன்று மலங்களும் மூன்று அசுரரென…
தோன்றியநாள் தொட்டு தொடர்ந்துவந்து – வான்சேரும்
நாள்வரையும் வாட்ட …அதைநசித்து
நற்கதிக்குள்
ஆழ்த்தும் கதைசூரன் போர்.
“தீமை திரளும் திசையில்… பெருநன்மை
தோன்றும்.துயர்வீழ்த்தச் சூழ்ந்துவந்தே – தோற்கடிக்கும்”
என்ற நிஜமுணர்க இந்நாளில்.
ஞானவேல்
மன்னனிடம் கேட்பாய் வரம்.
கந்தஷஷ்டி…வாழ்வின் கறுமம் தொலையவைக்கும்
விந்தை விரதம்; இதைவிளங்கி- கந்தனருள்
கேட்டொவ்வோர் ஆண்டும்
கிளைத்துஎழும் மும்மலங்கள்
ஓட்டு, உன் வாழ்வை உயர்த்து.