எத்தனை முகங்கள் எங்கள் சுவர்களிலே?
எத்தனை முகங்கள்
புதிதாய்ச் சிரித்தபடி?
எத்தனை முகங்கள் கைகூப்பி கைகாட்டி?
எத்தனை முகங்கள்?
இன்றுவரை நாமறியா
எத்தனை முகங்கள்?
கண்டு கண்கள் புளித்துவிட்ட
எத்தனை முகங்கள்?
எமக்கு வியப்புதரும்
எத்தனை பிரசுரங்கள்?
எத்தனை சின்னங்கள்?
எத்தனை தரம்கிழித்தும்
இழித்தபடி சுவரில் மீண்டும்
எத்தனை முகங்கள்?
எங்கள் திசைவெளியில்
எத்தனை கோஷங்கள்?
எத்தனை கொள்கைகள்?
எத்தனை கோட்பாடு?
எத்தனை வாக்குறுதி?
எத்தனை வேசங்கள்?
எத்தனை நடிப்பு?
எத்தனை சத்தியங்கள்?
எத்தனை தந்திரங்கள்?
எத்தனைக்கு உரிமைகோரல்?
எத்தனைக்குப் பங்குபோடல்?
இத்தனை பேருமே இந்தச் சனங்களினைத்
தத்தெடுத்துக் காக்க
தமது அர்ப்பணிப்பை…
உத்திகளைச்…சொல்கின்றார்!
“உங்களினை மாற்றிடுவோம்
எங்களுக்கு ஆதரவு தாருங்கள்”
என்கின்றார்.
பொங்குகிறார் மேடைகளில்.
பிரசுரத்தில் புளுகுகிறார்.
சமூக வலைத்தளத்தில்
சந்தனமும் – சாக்கடையும்
தமக்கும் – எதிரிகட்கும்
அள்ளிஅள்ளிப் பூசுகிறார்.
ஆறு கதிரைகட்கு அடிபடுகிறார் நா-
நூறு நபர்கள்.
நொடிந்து நொண்டி ஊரும்
ஊரை நிமிர்த்தியே ஓடவைக்க
வழி,திட்டம்
ஏதேனும் சொல்லாமல்…,
எதிர்த்தரப்பைக் குறைகூறி
“நாம் செய்வோம்” என்கின்றார்.
“நாளை யுகம் மாறும்”
” நாளை அமைப்புமாற்றம்
நடைமுறைகளில் மாற்றம்
சூழும்” எனச்சீறிச் சுழல்கின்றார்.
‘நம் நிலைமை
மாறினாற் சந்தோஷம்’
அதற்கு யார் என்செய்வார்?
வட்டுக்கோட் டைக்கு வழிகேட்டோம்;
“துட்டுக்கு
கொட்டைப்பாக் கிரண்”டென்றே…
பலர் இன்றும் சொல்கின்றார்.