என்ன ஆகும்?

விழலுக்கு இறைக்கின்ற நீராய்த் தானே
வீழுது நம் வாக்குக்கள்; தேர்தல் என்னும்
தொழிலுக்குப் புதிதாகப் பலபேர் வந்து
சூழுரைத்துத் திரிகின்றார்.ஒன்றாய் அன்று
புழங்கியவர் தங்களுக்குள் குத்துப் பட்டு
புதிய புதிய கட்சி, சுயேட்சை, என்று
விளையாட வருகின்றார்; கதிரை ஆசை
விடவில்லை; மீள ஊரை ஏய்க்க வாறார்!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ப தற்கு
ஒன்று ‘பட்டால்’ உண்டு வாழ்வு என்று தாமாய்
இன்று புதுப் பொருள் சொல்லி எழுந்தார் பல்லோர்!
ஏன், எதற்கு, யார்க்கு, என்ன கொள்கை, கோட்பா-
டென்றுரைக்காப் பலர்
ஆட்சிக் கனவு கண்டு
ஏதேதோ நியாயங்கள், கற்பி தங்கள்,
சொன்னபடி திரிகின்றார்! “மாற்றம் ஒன்று
சூழும் யாமும் பங்கெடுப்போம்” என்றே ‘நின்றார்’!

ஆற்றுப் படுத்தி வழி காட்ட, சற்று
அதட்டியேனும் நெறிப்படுத்தி உண்மை சொல்லி
தேற்றிவிட, ஆட்களில்லாக் காலம். யாரென்
செய்தாலும் கேள்விகேட்கத் துணியா நேரம்.
மாற்றுக் கருத்திருக்கலாம்… ஏமாற்றி ஏய்க்கும்….
மலிந்த ஜனநாயகத்தின் சாபம்! நூறு
வேற்றுமைகள் பெருக்கி எழும் கோசம்;யார் தான்
வென்றாலும் மக்கள் வாழ்வில் தொடரும் சோகம்!

தெரிந்தவர்கள், சொந்தங்கள், சமூகம், சாதித்
தெரிவுகளால்… வாக்குக்கள் சிதறுப் பட்டு;
ஒரு இரண்டு ஆசனங்கள் பெறுதல் கூட
முயற்கொம்பாய் ஆனபின்பு; “பலத்தைக் காட்டிக்
குரல் கொடுப்போம், பாராளு மன்றில் ஞாயம்
கொண்டருவோம்” என்று… என்ன ஆகும்?
‘செல்லாப்
பொருள்’போல அரசியலின் உரிமை மாழும்.
இதைப்புரியா திருப்பவரால் என்ன லாபம்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.