இன்னுமென்ன என்ன கொடுமைகள் கன்றாவி இங்கேநம்
முன்காண உள்ளோம்? முழுவிருப்பி னோடு முனைந்தாண்டு
சென்றவர்கள் போக… கிறுக்கர் புளுகர்
திறமையற்றோர்
இன்றெழுந்தார் எம்மை எடுத்தாள
என்ன இழவிதுவோ?
அறுவரை மன்றுக் கனுப்பிவைக்க நானூறு ஆர்வலர்கள்
புறப்பட்டார்; ஏதேதோ பேசிப் பலதும் புசத்துகிறார்.
மறைகழன்றோர் மண்ணிலெதுஞ் செய்யா மதியர் மளமளென்று
வறுகியூரை ஏய்த்து வளர்ந்தசிலர் வந்தார் தாம் மன்னரென்றே!
போக்கிரிகள் யோக்கியர்கள் போல குளித்துப் புதுக்கரகம்
தூக்கி அரிதாரம் பூசியே “நாங்கள் தான் தூயவர்கள்
வாக்களியும்” என்றெங்கள் வாசலுக்கு வந்தார் வளைகின்றார்.
கூக்குரல்கள் போட்டுக் குலைக்கின்றார்… கொள்கை கொடுமையென்றே!
இப்படியா னோர்கள் எழுந்துவந்தே இன்று “எமை ஆள-
அர்ப்பணித்தோம்” என்று அழுவதற்கு
காரணம் யார்? ஆம் நாமே!
அப்பப்போ நாங்கள் அவரவரை அவ்வவ் இடங்களிலே
நிற்பாட்டி விட்டிருந்தால் இந்த நிலைஎமக்கு நேர்ந்திராதே!
எங்களிலும் உண்டு தவறு; எதையும் இனங்கண்டு
இங்கு சரியானோர் தம்மை வளர்க்கவே எண்ணிடாது
தங்கள் நலன்காக்க ஏங்கியே எங்கள் தலைவராகப்
பொங்குவோரைப் போற்றிப் புகழ்ந்து புரிந்தோம் பொதுத்தவறே!
நாங்கள் – அதாவது நாம்…மக்கள்- ஏதேனும் ஞானமின்றி
ஈங்கு பொருத்தமற்றோர் எங்கள் தலைவர் எனமாறத்
தாங்கிப் பிடித்தோம்; அவர்கள் அதனால் தலையெடுத்துத்
தீங்கே விளைவித்தார்; செய்வோம் நாளை திறம்தெரிவே!