கணிக்க முடியவில்லை… காற்று புயலாவதனை.
கணிக்க முடியவில்லை…
கனமழை தொடர்வதனை.
கணிக்க முடியவில்லை… காற்றழுத்தத் தின்திசையை.
கணிக்க முடியவில்லை…
கடும்புயலின் நகர்வை.
கணிக்க முடியவில்லை… புயற்காலின் வேகத்தை.
கணிக்க முடியவில்லை… புயற்தாக்கச் சேதத்தை.
கணிக்க முடியவில்லை… புயல் நெருங்கும் நேரத்தை.
கணிக்க முடியவில்லை… புயல் கடக்கும் புள்ளியினை.
கணிக்க முடியவில்லை… அது
அமைதி காப்பதனை.
கணிக்க முடியவில்லை… அது வலுவிழப்பதனை!
“புயலடிக்கப் போகு”தெனப் புலம்பி,
பலர்…எலாரும்
வியக்க எதையெதையோ எதிர்வுகூறி,
“விரைந்திதுதான்
நடக்கும்”என நாடுநம்ப
நானூறு கதைபேசி,
நாலைந்து நாட்களின் பின்…
தமதாற்றாமை ஏற்றுக்
கூறுகிறார்…
“நவீன அறிவினாலும் சரியாய்க்
கணிக்க முடியலை இப் புயலின் கதையை” என்று!
இப்புயலை மட்டுமல்ல…
இயற்கையை, காலத்தை,
இப்பிர பஞ்ச இரகசியத்தை,
அதன் சக்தி
சமநிலையை,
இயற்கையின் வெவ்வேறு கூறுகளை
எமக்குப் புரியவைக்க
எவரோ குறியீடாய்ச்
சமைத்த கடவுளரை,
சாமிகளின் குணங்களையும்,
கணிக்க முடியாது!
எம்புலன்கள், கரணத்தால்
கணிக்க முடியாத கனக்க
எமைச் சூழவுண்டு!
இதையுரைத்தெம் கர்வம் இறுமாப்பைச் சாய்ப்பதற்கு
விதிபுரியும் விளையாட்டு களை உணர்ந்தோ மா கண்டு?