‘ சிவத்தமிழ்ச் செல்வி’ என்று
திசையெட்டும் அழைக்கும் அன்னை.
தவப்பெரு வாழ்வு வாழ்ந்து
தமிழ்,சைவம் காத்த பெண்மை.
எவர்க்கும்…ஈடில்லாத் தாய்மை.
இரும்புப் பெண்ணான தூய்மை.
அவரின் ‘நூறகவை ஆண்டு’…
அவர் நாமம் அழியா துண்மை!
‘தெல்லியூர்த் துர்க்கை’ பாதம்
தினந்தொறும் பணிந்து, அந்தத்
‘தெல்லியூர்த் துர்க்கை’ மேன்மை
தினம் புவி வணங்க வைத்து,
வல்ல ‘சொற் பொழிவால்’ சைவ
வலிமையை உரைத்து, தெய்வ
இல்லறம் காத்த கன்னி!
இரக்கத்தால் பலர்க்குத் தாய் நீ!
நிமிர் நடை நடந்து, அஞ்சா
நேர்கொண்ட பார்வை பார்த்து,
சமய நற் பணிக ளோடு
சமூகத்தின் குறைகள் தீர்த்து,
அமைத்தனள் ‘மகளிர் இல்லம்’
“அநாதையார் உலகில்”? என்று,
சமைத்தாராம் பசியைக் கொன்று,
சரித்திரம் படைத்தார் அன்று!
அன்னையின் ‘அகவை நூறை’
அனைவரும் வியந்து பாடி,
அன்னைசெய் திட்ட சேவை
அழியாத கதைகள் பேசி,
இன்றைக்கும்…அவரின் எண்ணம்
ஈடேறி வாகை சூடி
வென்றது ‘ செஞ்சொற் செல்வர்’
வினைகளால்…புகழ்வோம் கூடி!