பொங்குகிறோம் இம்முறையும்!

பொங்குகிறோம் இம்முறையும்! புதிய பானை,
புத்தரிசி, புதுப்பால், சற்கரை, தேன், நெய்யும்,
மங்கலமாய்க் கோலமும், தோரணமும், இஞ்சி
மஞ்சள் மா இலை, பழங்கள், கொண்டு…மீண்டும்
பொங்குகிறோம்! நீராடி, புனிதம் சூட்டி,
பானையேற்றி, பால் பொங்கும் வரை தீ மூட்டி,
பொங்கிப் பால் வழிந்தோட அரிசி தூவி,
வெடிகொழுத்தி, பொங்கிப், பின் படைத்தோம் பாடி!

எல்லாமே புதிதான இனிய தை, ஆம்…
” இது பிறந்தால் வழிபிறக்கும்” என்றார் முன்னோர்!
பொல்லாப்பு அகன்று பூரிப்பு வந்து,
பொலிந்தோங்கும் களனி, தோட்டம் உணவைத் தந்து,
வல்ல கால் நடை வளமும் பெருகி நின்று,
மனக்கொப்பில் புதுத்தளிர்கள் துளிர்க்கும் இன்று!
எல்லையற்ற வாழ்வில்…இடர் நீளா தென்னும்
எண்ண ஊற்று தெம்பூட்ட பூக்கும் அன்பு!

‘சூரியனார்’ தாழடிக்குச் சரணம் சொல்வோம்…
சூழிருட்டை தினம் விடிவில் துடைக்கும் அன்பர்;
மாரி மழை பெய்யவைத்து, புவியின் ‘ஆறு-
வகையுயிர்க்கும்’ ‘உணவளிக்கும் முதலாய்’ நிற்கும்
பேரறிஞர்; சூடு, ஒளி சுரந்து சின்னன்
பெரிய கோளை ஈர்த்தாண்டு இயக்கும் நண்பர்;
ஓர் இறையின் இயல்போடு கண்முன் நிற்கும்
‘உயிர்ப்பினது மூலர்’; நன்றி உரைத்தோம் ஊரர்!

நம்தமிழர் வாழ்வியலில்… ‘போகி’ என்று
நமது சூழற் பழைய பொருள் தீயில் வீசி,
எம் பெருமைத் ‘தைப்பொங்கல்’ ‘பட்டிப் பொங்கல்’
இருநாளும் சூரியர்க்கும் பசு,காளைக்கும்
எம் மனதால் நன்றிசொல்லி, ‘காணும் பொங்கல்’
என்று உற்றார் உறவு நட்பும் கலந்து கூடி,
நம் பண்பா டதன் வேரைக் காப்போம் தேடி!
நம் இடர்கள் வெடியொலியில் நலியும் ஓடி!

ஆண்டொன்று மலருகிற காலம் வந்தால்
அற்புதங்கள் தோன்றுவதும்; அதற்குப் பின்னே
மீண்டும் நெருக்கடி தடைகள் நெருங்கி வந்து
வேதனைகள் தருவதுவும்; இறுதி நாளில்
” தோன்றும் வழி – தை பிறந்தால்” என நாம் நம்மை
தூண்டுதுவும் வழமை! இம் முறையும் பொங்கி
வேண்டுகிறோம் மகிழ்வை!
அது ஆண்டு முற்றும்
மேவ இறை, மன்னரிடம் கேட்டோம் தீர்வை!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.