கைவிட்ட படகும் காலமும்.

கைவிட்டுச் சென்றது காலம்
நம்பவைத்துக்
கைவிட்டு நடுக்கடலில் காலை இடறிவிட்டு
பைய நகர்ந்ததது
ஓட்டைப் படகினிலே…
துடுப்புடைந்து போன துயரிடையே…
சுக்கானும்
இடையிடையே நின்ற இடரிடையே…
பேரலைகள்
சீறச் சமுத்திரம் திகைக்கையிலே…
குபுகுபென்று
நீர்பாய்ந்து படகு நிலைகுலைந்து மூழ்குகிற
வேகம் தடுக்க விதியற்று
இருந்தயாரும்
கூவி…மரண பயத்தில்…மிகக்குளறி
சாவைக்கண் முன்னே
சந்தித்து மூர்ச்சையுற…,
கைவிட்டுச் சென்றது காலம்!
அன்றொருநாள்
புயலும் மழையும் புகுந்தடித்த சூறையதும்
உயிருறைய வைக்கும் குளிரும்
உலுக்கிவிட
தத்தளித்து நின்ற தனிப்படகை
பேயலைகள்
கத்திக் கவிழ்க்கவர… ‘கடவுளே காத்தருள்க’
என்று மரணத்தின் இறுதிவாசல்
வரையேறிச்
சென்ற நொடியில்…திடீரென்று
ஓர்நிசப்தம்
சூழ்ந்து…அலைதணிந்து
சுக்கான் செயற்பட்டுக்
காத்தது அனைவரையும்…கடுகளவும் தீங்கற்று.
காத்ததன்று காலம்…
கைகொடுத்து மீட்டதன்று!
ஏதோ ஒருதேவை இருக்கென்று
அனைவரையும்
காத்ததன்று காலம்:
இன்று…இனித் தேவையில்லை
என்று முடிவுசெய்து எமனை அருகழைத்து
சென்றது காண் காலம்…
திசையை நடுங்கவைத்து!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply