அடிமையாக இருக்கமாட்டேன்; யாரை யேனும்
அடக்கி அடிமையாக்கிடவும் மாட்டேன்; யார்க்கும்
குடிமைசெய்து வாழமாட்டேன்; குட்டக் குட்டக்
குனிந்தேவல் செய்யமாட்டேன்; யாரும் யாரை
அடக்கவந்தால் அதைப்பார்த்தும் இருக்கேன்; எந்தன்
ஆயுதமாய் கவியெடுத்து யுத்தம் செய்வேன்.
“விடியவேண்டும் எல்லோர்க்கும்” என்று நேர்வேன்.
விடிவுக்காய் முயல்வோரின் பக்கம் நிற்பேன்.
என்கோபம் வருமிடரை எரித்துத் தீய்க்கும்.
என்சாபம் கொடுந்தீயர் தலையைச் சாய்க்கும்.
என் ஞானம் மெலிந்தவரை வலியர் ஆக்கும்.
என்வார்த்தை ஏழைகட்குப் பொருளாய் மாறும்.
என்பாக்கள் இளைத்தவரை ஊக்கித் தூண்டும்,
இலகுவழி ஊர்க்குரைக்கும். உலகில் எங்கே
துன்பமுறும் குரலுண்டோ…அதற்கென் எண்ணம்
சொப்பனத்தில் சென்றேனும் உதவி… வாழ்த்தும்!