கொடுங் கோடை

தீப்பிடித்து எரிகிறது எங்களது பகல்கள்.
ஏப்பம் இடுகிறது அனல்
எட்டுத் திசைகளையும்.
யாரெவரின் பெருமூச்சு அனற்காற்றாய் அடிக்கிறது?
யார் கரித்து இட்ட சாபம் கனலை வளர்க்கிறது?
மண்ணும் மரமும் வனமும் குளம் கடலும்
விண்ணும் கருக..
எரிந்த மணம் காற்றினிலே
எங்கும் அலைகிறது!
எண்ணங்களும் பொரிந்து,
அங்கங்கள் அவிந்து, அடங்கி
“ஒரு நிழல் கிடைப்ப
தெங்கே” எனநாங்கள் ஏங்கித் திரிகின்றோம்!
நாதொங்கி வேர்வை வீணீராய்
ஒழுக நாய்கள்
கோபத்தோ டுறுமிக் குலைத்து அலைந்துளன!
விசர்பிடிக்கக் கூடும் விலங்குகட்கு
என்ற ஒரு
உசாரில் உலவிடுது ஊர்.
இந்தக் கொடும் வெக்கை
எம்நிலத்தைப் பாலைவனம் ஆக்கிடுதோ?
மரம் தறித்து
எம்நிலத்தில் பாலைசெய்தோம்…
இதால் வெம்மை இடைஞ்சலின்றி
வந்துகுந்தி எம்மை வதைக்கிறதோ?
அறியாமல்
வெந்து கருகுகிறோம்!
வியர்வை நதி யாவரிலும்
சிந்தி மறுகணமே சிதறி
ஆவியாகிவிட…
நிற்கும் மரக்குடைகள்
கிளைக்கம்பி முறிந்து தொங்க…
கற்கள் தரை கொதிக்க…
கால்வைக்க முடியாது
உயிரைத் துளித்துளியாய் உறுஞ்சும்
இந்தக் கோடையிலே
மயிர்பொசுங்க நிற்கின்றோம்!
மாய்வோமா பிழைப்போமா?
பயிர்பச்சை காப்போமா?
பஸ்ப்பமாகிப் போவோமா?
குயில் குருகைக் காப்போமா?
குத்தி முறிகின்றோம்!
வாழ்விலும் வறுபட்டு
வரும் கோடையும் வறுக்க
வாழ்வும் கருக
வாடிக் கிடக்கின்றோம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.