கடல் சுதி மீட்டிட, அலை ஜதி போட்டிட,
கவி நூறு பாடி வருவாய்.
கனவினில் கண்டவை நனவினில் கைவரக்
கருவியாய்க் கலையைத் தொடுவாய்.
விடையிலாக் கேள்விகள் மிகமிக அதிகமே…
விளங்கிதை; ஞானம் பெறுவாய்.
‘விதியுனைத் தேர்ந்தது – எதையோ நடத்திட’
வினைபுரி நன்று…விரைவாய்.
உனதுவாழ் வென்பது வரையறை கொண்டது
உடலுக்கும் வயது உளது.
உயிர்செய்ய எண்ணினும் உடல் இயலாதழ
உளம் சோரக் கூடும் தொழுது.
உனதிடம் என்பது தனித்துவ மானது
உலகில்; உன் கடமை எஃது?
உணர்; அந்தக் கடமையை உனதாயுள் தீருமுன்
உரிமையாய்ச் செய்தல் அழகு!
உன்கடன் தீர்ந்திடில் உன்பணி நிறைவுறில்
உன்கதை முடிந்து போகும்.
உன்னாலே வந்திடும் வெற்றிடம் தன்னை ஓர்
உயிர் வந்து நிரவி மேவும்.
“உன்வெற்றிடம் வேறு யாராலுமே நிரவ
முடியாது” என்று வையம்
உரைக்க வாழ்; அதுதானே உன்பேரை
என்றென்றும்
உதிராமல் ஆள வைக்கும்!