ஏனென்றறியாது எழுதியது

என்னுடைய கவிதைகளை
ஏன்எதற்கென் றறியாது
இன்றும் படைத்தபடி இருக்கின்றேன்!
என்கவிதை
என்தனித் துவங்கொண்டு,
தனிச்சிறப்பு வடிவெடுத்து
என்இயல்பை நிரூபித்து இன்றும் மலர்ந்துளது.
மலர்ந்த அனைத்தையும் சேகரித்தேன்
இவற்றாலே…
என்ன பயன்எனக்கு?
என்ன பயன் புவிக்கு?
என்ப தறியேன்.
என்முற்ற மல்லிகையோ
நிதமும் பெருந்தொகையாய்ப் பூக்களினை
தயக்கங்கள்
எதுவுமே இன்றி
ஏன்எதற்கென் றுணர்வின்றி
பூத்துச் சொரிகிறதே…
பூத்த அவை உதிர்ந்து
காய்ந்தபின்பும் மீண்டும் பூத்தக் களிக்கிறதே!
என்ன பயன் அதற்கு?
என்ன பலன் புவிக்கு?
அறிந்தா…அதுநித்தக் கருமமெனப் பூத்திடுது?
என்முற்ற மல்லிகைபோல் நானும்
என்பிறப்புக்
கடனை… பணிக்கப் பட்ட
பொறுப்பாம்…என்
பங்களிப்பைப்… பூத்தபடி பயணித் திருக்கின்றேன்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply